கரூரில் நேதாஜி சிலையை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்

கரூர் காமராஜர் மார்க்கெட் அருகே இந்திய சுதந்திரப்போராட்ட வீரர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்களின் சிலை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 12 அடி உயரமுள்ள சிலை அமைக்கப்பட்டு கருர் நகராட்சியின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிலையை சுற்றியும் முட்செடிகள் முளைத்து புதர் மண்டி சிதிலம் அடைந்து காணப்பட்டதால் பொது மக்கள் மற்றும் பொது நல ஆர்வலர்கள் பலர் இதை சீர் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்ததின் பேரில் தனியார் வங்கியின் நிதி உதவியுடன், சுபாஸ் சந்திரபோஸ் உருவ சிலை புதுப்பிக்கப்பட்டு அதே இடத்தில் சிலையை அமைத்ததுடன் இரும்பு படிக்கட்டுகளுடன் சிலையை சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டு அதற்க்கான திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் ஆங்கிலேயர்களால் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவை அடிமைபடுத்தி ஆட்சி செய்து வந்தநிலையில் அவர்களை எதிர்த்து ஜாதி மதத்திற்க்கு அப்பாற்பட்டு இந்தியன் என்ற பார்வையில் ஒன்று பட்டு தன் உயிரைதியாகம் செய்து நம் முன்னோர்களால் போராடி பெற்று தந்த இந்த சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டியது நமது கடமை.

மேலும், நாட்டுப்பற்றும் மொழி பற்றும் ஒவ்வொரு மனிதனுக்கும் முக்கியம் என பேசினார். இதில் கரூர் மாவட்ட சுதந்திரப்போராட்ட வீரர்களின் வாரிசுகள் சங்க துணை தலைவர் ராஜேந்திரன் வரவேற்புரை ஆற்றினார்.

தலைவர் அவனாசிலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் அகில இந்திய சுதந்திரப்போராட்ட தியாகிகள் சமிதி தலைவர் குல்கர்னி மற்றும் புறவளர் மத்தாடு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

அப்போது அவர்கள் சுதந்திரப்போராட்ட நிகழ்வுகளை நினைவு கூர்ந்ததுடன், இன்றைய இளைஞர்கள் வரலாறுகளை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என கூறினர்.

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், மற்றும் சுதந்திரப்போராட்ட தியாகிகள் அப்பாராவ் நவலி, நித்யானந்த சர்மா உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஓம்சக்திசேகர் நன்றி கூறினார்.

நமது செய்தியாளர் : மு.மணிகண்டன்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே