அஜித் பவார் பதவியேற்ற உடனே நீர்பாசன முறைகேடு வழக்குகள் முடித்துவைப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 70 ஆயிரம் கோடி வரையில் ஊழல் நடைபெற்றதாக கூறப்பட்ட நீர்பாசன முறைகேடு தொடர்பான ஒன்பது வழக்குகளை அம்மாநில ஊழல் தடுப்பு பிரிவு முடித்துவைத்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் கூட்டணி அமைத்து உத்தவ் தாக்கரே தலைமையில் ஆட்சியமைப்பார்கள் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக சரத் பவாரின் அண்ணன் மகனும் தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவருமான அஜித் பவாரின் ஆதரவுடன் பா.ஜ.க ஆட்சியமைத்தது.

மீண்டும் தேவேந்திர பட்னவிஸ் முதல்வரானார். அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். அது மகாராஷ்டிரா அரசியல் களத்தில் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக அஜித் பவார் நீர்பாசனத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் நீர்பாசன தொடர்பாக நடைபெற்ற ஒப்பந்ததில் முறைகேடு நடைபெற்றதாக வழக்குத் தொடரப்பட்டது.

அது தொடர்பாக அஜித் பவார் சம்மந்தப்பட்டது தொடர்பாகவும் மகாராஷ்டிரா மாநில ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை செய்து வருகிறது.

அவர் துணை முதல்வராக பதவியேற்ற இரண்டாவது நாளில் தற்போது நீர்பாசன முறைகேடு தொடர்பான 9 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளது.

அது அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள மகாராஷ்டிரா மாநில ஊழல் தடுப்புப் பிரிவு டி.ஜி. பரம்பீர் சிங், நீர்பாசனம் தொடர்பாக 3000-க்கும் அதிகமான புகார்கள் தொடர்பாக நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். தற்போது முடித்துவைக்கப்பட்ட வழக்குகள் ஏற்கெனவே விசாரணை செய்ததுதான். இன்று முடித்து வைக்கப்பட்ட வழக்குகள் எதுவும் அஜித் பவார் தொடர்பான வழக்குகள் கிடையாது என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே