காவல் துறையில் தமிழில் தகவல் தொடர்பு : டிஜிபி திரிபாதி அதிரடி உத்தரவு

தமிழக காவல் நிலையங்களில் பதிவேடுகள் மற்றும் குறிப்பாணைகள் தமிழில் இடம் பெறவேண்டும் என தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இருக்கைகளில் உள்ள தன் பதிவேடு, முன்கொணர்வு பதிவேடு உள்ளிட்ட அனைத்து பதிவேடுகளும் தமிழில் பராமரிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகை பதிவேட்டில் தமிழில் கையொப்பம் இடுவதுடன், அனைத்து விதமான வரைவு கடித தொடர்புகள் மற்றும் குறிப்பாணைகள் தமிழில் எழுதப்படவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அனைத்து காவல் வாகனங்களிலும் காவல் என தமிழில் எழுதுவதுடன் அலுவலக முத்திரைகள் மற்றும் பெயர்ப்பலகைகள் தமிழில் மாற்றப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து காவல்துறை அலுவலர்களுக்கும் உரிய அறிவுரை வழங்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

டிஜிபி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற தமிழ் வளர்ச்சி ஆட்சி மொழி திட்ட செயலாக்க ஆய்வில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்ககம் வழங்கிய அறிவுறுத்தலின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே