ஸ்கூட்டரில் சென்ற பிரியங்கா காந்தி..!!

முன்னாள் காவல்துறை அதிகாரியின் குடும்பத்தைச் சந்திக்க சென்ற என்னைக் காவல்துறையினர் கழுத்தைப் பிடித்து நெறித்து கீழே தள்ளிவிட்டனர் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 20-க்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் காவல்துறை அதிகாரி எஸ்.ஆர். தாராபுரியைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

அவரது குடும்பத்தினரைச் சந்திப்பதற்காக பிரியங்கா காந்தி காரில் சென்றார்.

அவரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் மேற்கொண்டு செல்ல அனுமதிக்கவிலை.

அதனையடுத்து, அருகிலிருந்த காங்கிரஸ் தொண்டர் ஒருவரின் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து பிரியங்கா காந்தி சென்றார்.

அவரை பின்தொடர்ந்து சென்ற காவல்துறையினர் அவரை வழிமறித்தனர். பின்னர், இரு சக்கர வாகனத்திலிருந்து இறங்கி நடந்து சென்றார்.

நடந்து சென்ற அவரை காவல்துறையினர் இழுத்துப் பிடித்து தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர்.

இருப்பினும், அதனையும் மீறி காவல்துறை அதிகாரியின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினரைச் சந்தித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, நான் தாராபூரின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்றபோது காவல்துறையினர் என்னைத் தடுத்து நிறுத்தினர். பெண் காவலர்கள் என்னைக் கழுத்தைப் பிடித்து நெறித்து கீழே தள்ளிவிட்டனர் என்று குற்றம் சாட்டினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே