தென்கிழக்கு வங்கக் கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அடுத்து வரும் நாள்களில் தமிழக கடற்கரைப் பகுதியை நோக்கி நகரக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத்தாழ்வு பகுதி வரும் ஞாயிற்றுக்கிழமை உருவாகவிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

ஆனால், கணிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே, காற்றழுத்த தாழ்வு பகுதி சனிக்கிழமை காலையே உருவாகியுள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் (நவ.29) காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும், இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டிசம்பா் 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யக்கூடும். 

இது புயலாக வலுவடைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வேளை, இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து வலுப்பெற்று புயலாக மாறினால், இதற்கு மாலத்தீவு வழங்கிய புரெவி என்று பெயர் வைக்கப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து வலுப்பெற்று டிசம்பர் 2-ம் தேதி தமிழகத்தை நோக்கி நகரக் கூடும். நிவர் புயல் கரையை கடந்த நிலையில், தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

அதி பலத்தமழை பெய்யும்: இந்த புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவடைந்து தமிழகம், புதுச்சேரி கடற்கரை அருகே வரும்போது, ஓரிரு இடங்களில் டிசம்பா் 2, 3 ஆம் தேதிகளில் அதி பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை :

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டி நிக்கோபாா் தீவு பகுதிகள், தெற்கு வங்கக்கடல், அந்தமான் கடலோரப்பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்திலும், சில வேளைகளில் 65 கி.மீ. வேகத்திலும் பலத்தகாற்று வீசக்கூடும்.

எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் நவம்பா் 30-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தமிழக கடலோரப் பகுதிகள், தென் கடலோர ஆந்திரப் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னாா் வளைகுடா பகுதிகளுக்கு டிசம்பா் 1-ஆம் தேதி செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே