லாட்டரி சீட்டு விற்பனை : சென்னை, விழுப்புரம், மதுரையில் 14 பேர் கைது

விழுப்புரத்தில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டதாக அதிமுக பிரமுகர் கோல்ட் சேகர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

மூன்றாம் நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையால், விழுப்புரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் உள்பட ஐந்து பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து லாட்டரி விற்பனையை தடுக்க போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் திண்டிவனம் பகுதிகளில் மூன்றாம் நம்பர் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் அங்கு விரைந்த போலீஸார், லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டதாக விழுப்புரம் அதிமுக பிரமுகர் கோல்ட் சேகர், திண்டிவனம் ரோஷன், ஷேக் அப்துல்லா, பெருமாள் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதேபோன்று சென்னை தண்டையார்பேட்டையில் மூன்றாம் நபர் லாட்டரி விற்பனை செய்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தண்டையார்பேட்டை நேதாஜி நகர் இரண்டாவது மேம்பாலம் அருகே ஆட்டோ ஸ்டாண்டில் லாட்டரி விற்பனை செய்வதாக ஆர்.கே. நகர் ஆய்வாளர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அங்கு விரைந்த போலீசார் ஆட்டோவில் அமர்ந்து லாட்டரி விற்பனை செய்த மூன்று பேரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் தண்டையார்பேட்டையை சேர்ந்த பாபு, ராஜேஷ் மற்றும் பழைய வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்பது தெரியவந்தது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பரங்குன்றம் அடுத்த கைத்தறி நகரில் ஆன்லைன் மூலம் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைதொடர்ந்து அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், கைத்தறி நகரை சார்ந்த பாஸ்கர், இடியாப்ப ரவி, கிருஷ்ணா ராவ், கோபிநாத், கேரளா சுரேஷ் ஆகியோர் லாட்டரி விற்பனை செய்ததைக் கண்டுபிடித்தனர்.

பின்னர் அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே