பயங்கரவாதத்தால் 72 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுவதாக பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார்.
பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாடு பிரேசிலின் பிரேசிலியா நகரில் நடைபெற்றது.
இதில் சீன, ரஷ்ய, பிரேசில், தென்னாப்ரிக்க நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்றார்.
அங்குள்ள ITAMARATY மாளிகையில் ஐந்து நாட்டுத் தலைவர்களும் ஒன்றாக இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து பிரிக்ஸ் நாடுகளின் வர்த்தக கவுன்சில் மற்றும் புதிய வளர்ச்சி வங்கிக் கூட்டம் நடைபெற்றது.
அதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பிரிக்ஸ் நாடுகளிடையே 500 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தகத்தை அடுத்த ஆண்டுக்குள் எட்டுவதற்கான செயல் திட்டத்தை தயாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
வெளிநாட்டு வர்த்தக விதிகள் சவாலைச் சந்தித்துள்ளன. அதை சமாளிக்க நிதி தேவை என கடந்த முறை கூறினோம்.
அந்த தேவையை இந்த மாநாடு அங்கீகரித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
உலக வர்த்தக அமைப்பு, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை பலப்படுத்த, சீரமைக்க நாம் இணைந்து செயல்பட வேண்டும்.
உலக அமைதிக்கும், வளத்திற்கும் பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக கூறிய பிரதமர் நரேந்திர மோடி, அதனால் 72 லட்சம் கோடி பொருளாதார இழப்பு ஏற்படுவதாக வேதனை தெரிவித்தார்.
அதன் காரணமாக வர்த்தகம் பாதிக்கப்படுவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு லட்சத்து 25 ஆயிரம் பேர் பயங்கரவாதத்தால் இறந்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
பயங்கரவாதத்திற்கு எதிராக பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.