15 நாட்களில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு வரும் – துணை முதலமைச்சர்

உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு 15 நாட்களில் வெளியாகும் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை அடுத்த மாதத்தில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

இதில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள தயார் ஆவது மற்றும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் கலந்து கொண்டு பேசிய துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு 15 தினங்களில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

இதனிடையே மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமியை சந்தித்து அதிமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நெல்லை ஆகிய நான்கு மாவட்டங்களை ஒன்பது மாவட்டங்களாக தமிழக அரசு மறுவரையரை செய்துள்ளதாகவும், இதன் விவரங்களை திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் பத்தாம் தேதிக்குள் வழங்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெறும் என்று தெரிவித்தார்.

ஒரே இடத்தில் 3 ஆண்டுகளாக பணியாற்றி வரும் காவல் அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்யுமாறு அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.களுக்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே