மம்தா பானர்ஜி, உதயநிதி ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு எதிராகத் தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாஜக தலைவர்கள் மறைந்த அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் குறித்து நாகரிகமற்ற வார்த்தைகளைப் பேசியதாகக் கூறி பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், முக்தர் அப்பாஸ் நக்வி, பாஜக பொதுச் செயலாளர் பூபேந்திர யாதவ், செய்தித் தொடர்பாளர் அனில் பலூனி ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் இந்தப் புகாரை அளித்துள்ளனர்.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

“நாட்டின் வரலாற்றிலேயே முதல் முறையாக மாநில முதல்வர் ஒருவர் வாக்குப்பதிவு நடக்கும்போது, வாக்குப் பதிவு மையத்தில் அமர்ந்து தர்ணா செய்து மம்தா பானர்ஜிதான்.

மம்தா பானர்ஜி தர்ணா செய்வதற்கு முன், நந்திகிராமில் 74 சதவீத வாக்குகள் பதிவாகிவிட்டன. வாக்குப்பதிவு அமைதியாகவும் நடந்து கொண்டிருந்தது. முதல்வர் மம்தா நடந்துகொண்ட விதம் குறித்த ஆதாரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளோம்.

அரசியலமைப்புப் பதவியில் இருக்கும் ஒருவர், தேர்தல் வாக்குப்பதிவு நடக்கும்போது, வாக்குப்பதிவு மையத்தில் தர்ணாவில் அமர்வது ஜனநாயகத்துக்கு விரோதமானது. தேர்தல் விதிகளுக்கு முரணானது. அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மறைந்த பாஜக அமைச்சர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகிய இருவரும் அரசியல் நெருக்கடிகள் காரணமாக உயிரிழந்தனர் என்று ஆதாரமற்ற, நாகரிகமற்ற சொற்களை உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளோம்”.

இவ்வாறு ஜவடேகர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே