டெல்லியில் காவல்துறையினரை தாக்கிய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் சீருடையுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறப்பு காவல் ஆணையர் அளித்த உறுதிமொழியை ஏற்று பதினோரு மணி நேர போராட்டம் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது.

டில்லி டீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் கடந்த சனிக்கிழமை வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியது.

அப்போது காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய வழக்கறிஞர்கள், வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.

இதனால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது. இந்த வன்முறையில், 20 காவலர்களும், 8 வழக்கறிஞர்களும் காயமடைந்தனர்.

காவல்துறையினரை வழக்கறிஞர்கள் மிக மோசமாக தாக்குவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த டெல்லி உயர்நீதிமன்றம் முன்னாள் நீதிபதி தலைமையிலான விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.

காவல் அதிகாரிகள் இருவரை பணி இடமாற்றம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. காவல்துறையினரை கண்டித்து டெல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இந்தச் சூழலில் டெல்லி காவல்துறை தலைமை அலுவலகத்தின் முன்பு திடீரென ஏராளமான காவலர்கள் திரண்டனர்.

சீருடையுடன் திரண்டு காவலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி-யின் படத்தில் நீங்கள் எங்களுக்கு தேவை என எழுதப்பட்ட பதாகைகளை தூக்கி வந்தனர்.

போலீசாரை தாக்கிய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பணியின்போது காவலர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கூறியும் அவர்கள் முழக்கமிட்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட காவலர்களை சமாதானப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்களிடம் பேசிய டெல்லி போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் அமைதி காக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

எனினும் காவல்துறையினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவலர்களுக்கு பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்தியில் பேசிய சிறப்பு காவல்துறை ஆணையர் சதீஷ் கொள்சா காவல் துறையினரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.

காவல்துறையினரை பணியிடை நீக்கம் செய்த டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றும், காயமுற்ற காவல்துறையினருக்கு தலா 25,000 ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் எனவும் சதீஷ் உறுதி அளித்து இருக்கிறார்.

இதனை தொடர்ந்து 11 மணி நேரமாக நடைபெற்ற போராட்டம் இரவு 8 மணிக்கு பிறகு திரும்பப் பெறப்பட்டது. இவ்விவகாரம் குறித்து துணைநிலை ஆளுநர் அணில் பைஜால் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இரு தரப்பினரும் பரஸ்பரம் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். ஒட்டுமொத்த விவகாரத்தில், ஒருதலை பட்சமற்ற வகையில் நீதி வழங்கிட வேண்டும் என்றும் ஆளுநர் தெரிவித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே