லலிதா ஜுவல்லரி கொள்ளை தொடர்பாக 15 பேரிடம் தீவிர விசாரணையில் காவல்துறை

திருச்சி லலிதா ஜூவல்லரி நகை கொள்ளை தொடர்பாக 15 பேரிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூர் பஜனைமடத்தை சேர்ந்த திருமாறன் என்பவரை அழைத்து சென்று தனிப்படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொள்ளை கும்பலை சேர்ந்த மணிகண்டனிடம் பல கட்ட விசாரணை நடத்திய காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அதேபோல் கொள்ளையில் ஈடுபட்டதாக திருவாரூர் முருகனின் சகோதரியும், மற்றொரு கொள்ளையனான சுரேஷின் தாய் கனகவள்ளியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களைத் தொடர்ந்து குணா, மாரியப்பன், ரவி, பார்த்திபன் ஆகியோரிடம் திருச்சியில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அதில் கிடைத்த தகவலின்படி சீராத்தோப்பில் வசித்துவரும் திருவாரூர் முருகனின் சகோதரர் மகன் முரளி என்பவரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

முரளி அளித்த தகவலின்படி, பிரதாப் என்பவரை காவல்துறையினர் பிடித்து உள்ளனர்.

அதேபோல் திருவாரூர் பஜனைமடத்தை சேர்ந்த திருமாறன் என்பவரையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

கடந்த ஒன்றாம் தேதி திருச்சி லலிதா ஜுவல்லரியில் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக 15 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முருகன் கைது செய்யப்பட்டால் தான், கொள்ளை அடிக்கப்பட்ட நகைகள் எங்கே வைக்கப்பட்டுள்ளன என்ற விவரம் தெரியவரும் என காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.

தொடர்ந்து நான்காவது நாளாக காவல்துறையினர் திருவாரூரில் முகாமிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே