4 குற்றவாளிகளை என்கவுன்ட்டரில் போலீசார் சுட்டுக்கொன்றதற்கு திரையுலக பிரபலங்கள் வரவேற்பு

தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற 4 குற்றவாளிகளை என்கவுன்டரில் போலீசார் சுட்டுக்கொன்றதற்கு திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ஹைதரபாத் காவல்துறைக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இந்தநாட்டில் பெண்கள் பாதுகாப்பை உணரும் நாளை எதிர்நோக்கி காத்திருப்பதாக தெரிவித்தார்.

நடிகை சமந்தா தமது டிவிட்டர் பதிவில், பயம் சிறந்த தீர்வு என்றும், சில சமயங்களில் பயம் மட்டுமே தீர்வு என்றும் தெரிவித்துள்ளார்.

இதே போல நடிகர் விஷால், கடைசியில் நீதி காப்பாற்றப்பட்டு விட்டதாகவும், தெலங்கானா போலீசாருக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளனர்.

நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், ஹைதரபாத் என்கவுன்டர் சம்பவம் வரவேற்கத்தக்கது என்றும், பாலியல் பலாத்காரக் குற்றவாளிகளுக்கான நியாயமான தண்டனையாகவே தாம் இதை பார்ப்பதாகவும், தவறு செய்யும் நபர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி என்றும் தெரிவித்துள்ளார்.

நடிகை ரகுல் பிரீத் சிங், இது போன்ற ஒரு குற்றத்தை செய்துவிட்டு எவ்வளவு தூரம் உங்களால் ஓடிவிட முடியும் என்றும் தெலங்கானா போலீசாருக்கு நன்றி என்றும் பதிவிட்டுள்ளார்.

இதே போல நடிகை ஹன்சிகா, நடிகர்கள் ஜெயம்ரவி, நாகர்ஜூனா, ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நீதி காப்பற்றப்பட்டு இருக்கிறது எனவும், தெலங்கானா போலீசாருக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளனர்.

இதே போல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், போலீசாருக்கு தலைவணங்குவதாக தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே