லக்கிம்பூர் கேரி வன்முறை விவகாரம் – விசாரணைக்கு ஒரு நபர் ஆணையம் அமைத்தது உ.பி அரசு..!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஒருநபர் விசாரணையம் ஆணையம் அமைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பிரதீப் குமார் ஸ்ரீவஸ்தவா தலைமையில் ஆணையம் அமைக்கப்படுவதாகவும், ஆணையம் இரண்டு மாதங்களில் விசாரணை அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும் என்றும் உத்தரப் பிரதேச தலைமைச் செயலர் அவனிஷ் குமார் அவஸ்தி தெரிவித்துள்ளார்.

லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ளவிருக்கிறது உச்ச நீதிமன்றம். தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை இன்று விசாரிக்கிறது. அமர்வில் நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஹீமா கோலி இடம்பெறுகின்றனர்.

இந்த நிலையில், மாநில அரசு லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஒரு நபர் ஆணையத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லக்கிம்பூர் சம்பவம்: இதுவரை

கடந்த ஞாயிற்றுக் கிழமை அக்டோபர் 3 ஆம் தேதியன்று காலையில், உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் மாநில துணை முதல்வர், மத்திய இணை அமைச்சர் ஆகியோர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவதாக இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வரும் தந்தை, மகனுக்கு கருப்புக் கொடி காட்ட கேரி கிராமத்தில் விவசாயிகள் திரண்டிருந்தனர். அப்போது அமைச்சரின் மகன் இருந்ததாகக் கூறப்படும் கார் விவசாயிகள் மீது ஏறிச் சென்றது. இதில் 4 விவசாயிகள் உடல் நசுங்கி இறந்தனர். முதலில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாகக் கூறிவந்த பாஜகவினர், காங்கிரஸார் அதிரவைக்கும் கார் ஏற்றும் காட்சிகளை ட்விட்டரில் வெளியிட்டதில் இருந்து அதனைப் பற்றி பேசுவதைத் தவிர்த்துவிட்டனர்.

அக்டோபர் 3ஆம் தேதியன்று இரவே காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி லக்கிம்பூருக்குச் செல்ல முற்பட்டார். ஆனால், அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர் கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்து காரில் ஏற்ற முற்படுவது போன்ற அநாகரிகமான செயல்களில் போலீஸார் ஈடுபட்ட காட்சிகள் அடங்கிய வீடியோவும் வெளியானது. பிரியங்கா காந்தி சீதாபூரில் அரசினர் விடுதியில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். 36 மணி நேரத்துக்கும் மேலாக அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

லக்கிம்பூர் செல்ல வந்த சத்தீஸ்கர் முதல்வர் விமான நிலையத்திலேயே முடக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் அவர் வீட்டிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, இந்த சம்பவத்தில் நீதி விசாரணை வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோரும் லக்கிம்பூர் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நாடே கொந்தளித்து வரும் சூழலில், இன்னமும் இந்தச் சம்பவத்தில் தனது மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறி வருகிறார். நேற்று அஜய் மிஸ்ரா டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ளார்.

விவசாயிகள் 4 பேர், பொதுமக்கள் நால்வர், என 8 பேர் உயிரிழந்த இந்த சம்பவத்தை காவல்துறை கையாளும் விதம் நாடு முழுவதும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தான் உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ளவிருக்கிறது உச்ச நீதிமன்றம். தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு இன்று இந்த வழக்கை விசாரிக்கிறது.

இதற்கிடையில் 2 நாட்களாக தடுப்புக் காவலில் இருந்த பிரியங்கா காந்தி, அவருடைய சகோதரர் ராகுல் காந்தியுடன் லக்கிம்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தாரை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார்.

இந்நிலையில், வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்னதாக விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளது உத்தரப் பிரதேச மாநிலம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே