அம்மா உணவகத்தில் கருணாநிதியின் படம் – எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டு..!!

மதுரை சுந்தரராஜபுரம், ஆரப்பாளையம் அம்மா உணவக பணியாளர் குழுவை கடந்த வாரம் மாநகராட்சி வெளியேற்றி வேறு குழுவை பணி அமர்த்தியது. இந்நிலையில் சுந்தரராஜபுரம் அம்மா உணவக பெயர் பலகையில் மறைந்த முதல்வர் ஜெ., படத்துடன், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படமும் வைத்து சர்ச்சையை கிளப்பியுள்ளனர். இதனால், அம்மா உணவகங்களை ஆளும் கட்சியினர் ‘அய்யா’ உணவகங்களாக மாற்ற முயற்சிப்பதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

மதுரையில் உள்ள 12 அம்மா உணவகங்கள் துவங்கிய ஆண்டு முதல் பலர் பணியாற்றுகிறார்கள். 24 மாவட்ட அம்மா உணவக பணியாளர்களுக்கும் சமைப்பது குறித்து பயிற்சி கொடுத்த ஆரப்பாளையம், 2015ல் முதல்வராக இருந்த ஜெ.,வால் திறக்கப்பட்ட சுந்தரராஜபுரம் உணவக பணியாளர்கள் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டனர். பணியாளர்கள் மீது தொடர் புகார் வந்ததால் வெளியேற்றினோம் என மாநகராட்சி தெரிவித்தது.இந்நிலையில், சுந்தரராஜபுரம் உணவக பெயர் பலகையில் கருணாநிதி படம் வைக்கப்பட்டுள்ளது.

தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் ஆரப்பாளையம் உணவகத்தில் அம்மா உணவகம் என்ற பெயர் பலகையே அகற்றப்பட்டுவிட்டது. கொஞ்சம், கொஞ்சமாக ‘அய்யா’ உணவகங்களாக மாற்ற ஆளுங்கட்சியினர் முயற்சிப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.அம்மா உணவக பணியாளர்கள் கூறியதாவது: எந்த பணியாளர்கள் மீது, என்ன புகார் வந்தது? என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கவில்லை. புகார் தெரிவிக்கப்பட்ட நபரை மட்டும் தானே வெளியேற்ற வேண்டும். மொத்த பணியாளர்களையும் வெளியேற்ற காரணம் என்ன?. ஆளும் கட்சியினர் ஆரம்பித்த ஆட்டம், தலையீடு தான் இதற்கு காரணம் என்றனர்.அம்மா உணவக பிரச்னை குறித்து முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர்கள், இன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே