தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக இயங்கிவந்த குடிநீர் ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தமிழகத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கிவரும் குடிநீர் ஆலைகளை மூடி, மார்ச் 3ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இதையடுத்து பல்வேறு பகுதிகளில் இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், காஞ்சிபுரம் உட்கோட்ட பகுதிகளான திம்மசமுத்திரம், கீழ்கதிர்பூர், காலூர், அவலூர், செவிலிமேடு ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்த வருவாய் துறை அதிகாரிகள், சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்துவந்த 5 குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்தனர்.
போர்வெல் இணைப்புகள் மற்றும் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரை சட்டவிரோதமாக செயல்பட்டுவருவதாக 28 ஆலைகள் கண்டறியப்பட்டு, அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த 23 குடிநீர் ஆலைகள் கண்டறியப்பட்டு அவற்றுக்கு சீல் வைக்கும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில், அனுமதியின்றி இயங்கிய 4 குடி நீர் ஆலைகள் கண்டறியப்பட்டு, தண்ணீர் பைப்புகள் அறுக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன.
நீதிமன்றத்தில் இருந்து மறு உத்தரவு வரும்வரை சீலை அகற்றவோ, ஆலைகளை திறக்கவோ கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, பூந்தமல்லி, வெங்கத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக இயங்கிவந்த 5 ஆலைகள் சீல் வைக்கப்பட்டன.
மொத்தம் 21 ஆலைகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய16 ஆலைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைக்க உள்ளனர்.