இரட்டை ஆதாயம் பெற்றுவருவதாக எழுந்த புகார் – பதவியை துறந்தார் கபில்தேவ்

இரட்டை ஆதாயம் பெற்றுவருவதாக தன் மீது எழுந்த புகாரையடுத்து, தான் வகித்துவந்த இந்திய கிரிக்கெட் அணியின் ஆலோசனைக் குழு உறுப்பினர் பதவியை கபில் தேவ் ராஜினாமா செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு உட்பட்ட அமைப்பில் பொறுப்பு வகிக்கும் ஒருவர், அந்நிர்வாகத்தில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆதாயம் தரக்கூடிய பதவிகளை வகிக்கக்கூடாது என்பது தற்போதைய விதிமுறையாக உள்ளது.

ஆனால் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான கபில்தேவோ, கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியின் உறுப்பினர், கிரிக்கெட் வர்ணனையாளர், கிரிக்கெட் மைதான மின்விளக்கு நிறுவன உரிமையாளர் என ஆதாயம் தரக்கூடிய மூன்று பதவிகளை வகிப்பதாக மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் சஞ்சீவ் குப்தா, இந்திய கிரிக்கெட் வாரிய நெறிமுறை அதிகாரி டி.கே.ஜெயினிடம் புகாரளித்தார்.

புகார் தொடர்பாக, விளக்கம் கேட்டு கபில்தேவ், பெண்கள் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சாந்தா ரங்கசாமி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதையடுத்து ஆலோசனைக் குழு உறுப்பினர் பதவியை சாந்தா ரங்கசாமி ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் கபில்தேவும் தனது ஆலோசனைக் குழு உறுப்பினர் பதவியை தற்போது ராஜினாமா செய்துள்ளார்.

இருவரும் பதவி விலகியுள்ளதால், இவர்களின் பதவிக்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ரவி சாஸ்திரியின் நியமனம் செல்லாது என அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே