டெஸ்ட் போட்டியில் விக்கெட் கணக்கை தொடங்கினார் தமிழக வீரர் நடராஜன்..!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் விளையாடி வரும் தமிழக வீரர் நடராஜன், மேத்யூ வேட், லபுசேன் என இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் டெஸ்டில் தமிழக வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகியுள்ளார்கள்.

இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில், மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்தியா வெற்றி கண்டது.

அதைத் தொடர்ந்து சிட்னியில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணி அபாரமாக ஆடி டிரா செய்தது. 4-வது டெஸ்ட் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இன்று தொடங்கியுள்ளது.

காயம் காரணமாக இந்திய அணியில் பும்ரா, அஸ்வின், விஹாரி, ஜடேஜா ஆகியோர் இடம்பெறவில்லை.

இதனால் தமிழக வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகியுள்ளார்கள்.

மயங்க் அகர்வால், ஷர்துல் தாக்குர் ஆகிய இருவரும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்கள்.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் வில் புகோவ்ஸ்கிக்கு சிட்னி டெஸ்டில் ஃபீல்டிங் செய்தபோது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவருக்குப் பதிலாக மார்கஸ் ஹாரிஸ், டேவிட் வார்னருடன் தொடக்க வீரராக களமிறங்கியுள்ளார்.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. டேவிட் வார்னர் முதல் ஓவரிலேயே 1 ரன்னில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு ஹாரிஸை 5 ரன்களில் வீழ்த்தினார் ஷர்துல் தாக்குர். இதன்பிறகு மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டது ஸ்மித் – லபுசேன் ஜோடி. ஸ்மித் 36 ரன்களில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இது வாஷிங்டனின் முதல் டெஸ்ட் விக்கெட்.

முதல் நாள் தேநீர் இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி, 54 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. லபுசேன் 73, மேத்யூ வேட் 27 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ஆஸ்திரேலிய வீரர் லபுசேன், 195 பந்துகளில் சதமடித்தார். 18 டெஸ்டுகளில் அவர் அடித்துள்ள 5 சதமாகும்.

தனது 13-வது ஓவரில் மேத்யூ வேட்-ஐ வீழ்த்தி தனது முதல் டெஸ்ட் விக்கெட்டை எடுத்தார் தமிழக வீரர் நடராஜன். ஷர்துல் தாக்குரிடம் கேட்ச் கொடுத்து 45 ரன்களில் ஆட்டமிழந்தார் மேத்யூ வேட்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் தனது முதல் ஒருநாள், டி20, டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்துள்ளார் நடராஜன்.

இதன்பிறகு இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக விளங்கிய லபுசேனை 108 ரன்களில் வீழ்த்தினார் நடராஜன்.

இதனால் குறுகிய இடைவெளியில் இரு முக்கிய பேட்ஸ்மேன்களை வீழ்த்தி இந்திய அணிக்கு ஒரு திருப்புமுனையை உருவாக்கித் தந்துள்ளார் நடராஜன்.

ஆஸ்திரேலிய அணி 69 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்துள்ளது. கிரீன், டிம் பெயின் களத்தில் உள்ளார்கள்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே