ஐபிஎல்2020 ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் 15.5 கோடிக்கு ஏலம் : மற்ற வீரர்கள் ஏலம் போன விவரங்கள்

ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்களை தேர்வு செய்வதற்காக நடைபெற்று வரும் ஏலத்தில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் பதினைந்தரை கோடி ரூபாய்க்கும், இன்னொரு ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் 10 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.

கொல்கத்தாவில் நடைபெற்று வரும் ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் நிலவிய கடும் போட்டிக்கு பிறகு, இங்கிலாந்து வீரர் இயன் மோர்கனை 5 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச்சை ஏலம் எடுப்பது தொடர்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சாலன்ஜர்ஸ் இடையே நீண்ட நேரம் போட்டி நிலவியது.

முடிவில் ராயல் சாலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் அவரை 4 கோடி 40 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

ஆஸ்திரேலிய அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெலை விலைக்கு வாங்க பல அணிகள் போட்டியிட்டன.

முடிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் 10 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், கொல்கத்தா அணி நிர்வாகத்தால் சுமார் பதினைந்தரை கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

தென்னாப்பிரிக்காவின் ஆல் ரவுண்டர் கிறிஸ் மோரிஸ், ராயல் சாலஞ்சர்ஸ் அணியால் 10 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கப்பட்டார்.

இங்கிலாந்து வீரர் சாம் குர்ரனை சென்னை அணி ஐந்தரை கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் டெல்லி கேபிடல்ஸ் அணியால் 1 கோடியே 50 லட்சத்துக்கும், இந்திய வீரர் ராபின் உத்தப்பா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 3 கோடி ரூபாய்க்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

இந்திய வீரர்கள் ஹனுமான் விகாரி, புஜாரா ஆகியோரின் அடிப்படை விலை 50 லட்சமாக ஏலத்தில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அவர்களையும் இன்னொரு இந்திய வீரர் யூசுப் பதானையும் ஏலத்தில் எடுக்க எந்த நிர்வாகமும் ஆர்வம் காட்டவில்லை.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே