சீனாவின் ஷாங்காய் நகரில் அமைந்துள்ள டெஸ்லா கார் நிறுவனத்தில் இம்மாதம் உற்பத்தி தொடங்க உள்ளது.
அமெரிக்க நிறுவனமான டெஸ்லா, சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீனாவின் ஷாங்காய் நகரில் உற்பத்தி ஆலையை அமைத்துள்ளது.
கடல் கடந்து அந்நிறுவனம் அமைத்துள்ள முதல் உற்பத்தி ஆலை இதுவாகும். அங்கு இம்மாதத்தில் கார் உற்பத்தியை தொடங்க, அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.
இதை அடுத்து உற்பத்திக்கான ஆயத்தப் பணிகளில் டெஸ்லா ஈடுபட்டுள்ளது. மாடல் 3 ரக கார்களை வாரத்திற்கு 1000 என்ற எண்ணிக்கையில் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஓராண்டில் 5 லட்சம் கார்களை தயாரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது சந்தேகமாகவே உள்ளது. கார் ஆர்டர்கள், புதிதாக பணியமர்த்தப்பட்ட ஊழியர்களின் செயல்பாடுகள், கார்களை விநியோகிக்கும் நிறுவனங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே வாரத்திற்கு 1000 முதல் 2000 கார்களை உற்பத்தி செய்ய இயலும் என டெஸ்லா கூறியுள்ளது.
அமெரிக்காவுடனான வர்த்தகப் போர், உள்நாட்டு கார் விற்பனை சரிவு என்ற இக்கட்டான சூழலில் உள்ள சீனாவுக்கு டெஸ்லாவின் உற்பத்தி ஆறுதலாக அமைந்துள்ளது.