துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ் தனது தேர்தல் பிரசாரத்தின்போது மழையில் குடையை பிடித்துக்கொண்டு நடனமாடிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவின் அடுத்த மாதம் நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் துணை ஜனாதிபதியும் தேர்வு செய்யப்படுவார்.

அவ்வகையில் ஜனநாயக கட்சி சார்பாக தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகின்றார்.

அவர் தேர்தலில் வெற்றி கண்டால், அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை ஜனாதிபதி, முதல் கறுப்பின பெண் துணை ஜனாதிபதி, முதல் தெற்காசிய வம்சாவளி பெண் துணை ஜனாதிபதி, முதல் இந்திய வம்சாவளி பெண் துணை ஜனாதிபதி, முதல் தமிழ் வம்சாவளி பெண் துணை ஜனாதிபதி போன்ற பல்வேறு சாதனைகளை அவர் பதிவு செய்வார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கமலா ஹாரிஸ் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

அவ்வகையில் நேற்று முன்தினம் புளோரிடா மாகாணம் ஜாக்சன்வில்லே நகரில் கமலா ஹாரிஸ் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அங்கு திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது.

இருந்தாலும் கமலா ஹாரிஸ் குடையை பிடித்துக்கொண்டு தனது பிரசாரத்தை தொடர்ந்துள்ளார்.

அச்சமயத்தில் தனது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்த கூடிய வகையில் குடையைப் பிடித்தபடி மலையில் நடனமாடியுள்ளார்.

அந்த காட்சியை அவரின் ஆதரவாளர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வீடியோ பதிவு தற்போது வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் குடையுடன் தான் நடனமாடும் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ள கமலா ஹாரிஸ், ” மழையோ அல்லது வெயிலோ ஜனநாயகம் யாருக்காகவும் காத்திருக்காது” என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே