சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் வகையில் தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
பட்டாசு வெடிக்கும் 2 மணி நேரம் எது என்பதை மாநில அரசே முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்தது.
அதன்படி கடந்த ஆண்டு காலையில் 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலையில் 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.
இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அரசு வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும், தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலையில் 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்றும், பட்டாசுகளின் அருகில் தீப்பற்றும் பொருட்களை வைக்கக்கூடாது, குழந்தைகளை அருகில் செல்ல அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றம், புனித தலங்கள் மற்றும் குடிசைப் பகுதிகளில் பட்டாசு வெடிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இதேபோல் புதுச்சேரியில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 9 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.