அசாம் போராட்ட எதிரொலி – ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை ஒத்திவைப்பு?

வடகிழக்கு மாநில போராட்டங்களின் எதிரொலியாக, ஜப்பான் பிரதமரின் இந்திய பயணம் ரத்தாகும் நிலை உருவாகி இருக்கிறது.

யாரும் எதிர்பாராத வகையில் வடகிழக்கு மாநிலமான அசாமும், திரிபுராவும் தகித்துக் கொண்டிருக்கின்றன.

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக அம்மாநில அமைப்புகளின் போராட்டம் பெரும் வன்முறையாக மாறி கலவரங்களுக்கு வித்திட்டு இருக்கிறது.

ரயில் சேவை ரத்து, ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு, 144 தடை உத்தரவு என்று கொதிநிலையில் அந்த இரு மாநிலங்களும் இருக்கின்றன.

பிரதமர் வேண்டுகோளுக்கும் போராட்டக்காரர்கள் செவி சாய்க்கவில்லை.

வன்முறை அதிகமாகவே போலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் இந்திய பயணம் ரத்தாகிறது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

வரும் 15ம் தேதி கவுகாத்தியில் ஷின்சோ அபேவும், பிரதமர் மோடியும் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

2 நாட்கள் உச்சி மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருவரின் இந்த சந்திப்பு, ஒரு அதிகாரப் பூர்வமான பேச்சுவார்த்தையாகும்.

அசாம், திரிபுராவில் அசாதாரண நிலை காணப்படுவதால் பயணம் ரத்து செய்யப்பட போவதாக தகவல்கள் வந்துள்ளன.

ஆனால் இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவிஷ் குமார் எவ்வித கருத்தையும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

முன்னதாக ஜப்பானில் இருந்து வந்த குழு ஒன்று கவுகாத்தி சென்று ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு நடத்தியதாக தெரிகிறது.

அதன்பிறகே சந்திப்பை ரத்து செய்வதற்கான முகாந்திரம் உருவானதாக கூறப்படுகிறது.

ஒருவேளை ரத்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் மத்திய அரசுக்கு நெருக்கடியாக பார்க்கப்படும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே