குடியுரிமை மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம்!

குடியுரிமைச் சட்டத்திருத்தத்துக்கு எதிராக அசாமில் நடைபெறும் போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் மத துன்புறத்தல்களுக்கு ஆளாகி இந்தியாவில் தஞ்சம் புகுந்த இஸ்லாமியர்கள் அல்லாத இதர மதத்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு இருஅவைகளில் நேற்று முந்தைய தினம் நிறைவேறியது.

அதனைத் தொடர்ந்து, நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

அவர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து குடியுரிமைச் சட்டத்திருத்தம் அமலானது.

இந்தச் சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திரிபுரா, அசாம், மேகலாயாவில் மிகத் தீவிரமான போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

அசாம் மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், காவல்துறை வாகனங்கள், கட்டடங்களில் தீவைப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர்.

கவுகாத்தி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானார் சாலைகளில் இறங்கினர்.

அதனையடுத்து, காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.

மேலும், 11 பேர் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அசாமில் தொடரும் அசாதாரணச் சூழல் காரணமாக அம்மாநிலத்துக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், ரயில் நேரங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அசாமில் தீவிரமாக இருந்த போராட்டம் தற்போது மேகலாயாவுக்கும் பரவியுள்ளது.

மேகலாயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஷில்லாங்கிலும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே