நாமக்கல், புதுக்கோட்டையில் களைகட்டியுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகள்

நாமக்கல் மாவட்டம் போடிநாயக்கன்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகளும் மாடுபிடிவீரர்களும் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

450 காளைகளும், 300க்கும் மேற்பட்ட வீரர்களும் பங்கேற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா மற்றும் ஆட்சியர் மெகராஜ் தொடங்கிவைத்தனர்.

அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்து கொள்வோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டதையடுத்து வாடிவாசல் வழியாக காளைகள் திறந்து விடப்பட்டன.

அலங்காநத்தம், பொட்டிரெட்டிபட்டி, சேந்தமங்கலம், கொல்லிமலை, முள்ளுக்குறிச்சி, தம்மம்பட்டி உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த காளைகளில் பல களத்தில் நின்று விளையாடின.

மாடுபிடி வீரர்களிடம் சில காளைகள் அடங்கி போயின. விறுவிறுப்புடன் நடந்த இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை சுற்றுவட்டார மக்கள் கண்டு ரசித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் கவிநாடு கிராம ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்புடன் நடைபெற்றது.

முத்துமாரியம்மன் கோவில் மாசி திருவிழா முன்னிட்டு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்த போட்டியில் 850 காளைகளும் 450 மாடுபிடி வீரர்களும் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

வெற்றி பெற்ற வீரர்களுக்கும் அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

சுற்றுவட்டார மக்கள் ஏராளமானோர் ஆரவாரத்துடன் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை கண்டு ரசித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *