கொரோனா வைரசின் சமூக பரவலை தடுப்பதற்கான அரசின் முயற்சிகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலக சுகாதார அமைப்பின் அனைத்து ஆலோசனைகளையும் முறையாக பின்பற்றி வருவதாகக் கூறினார்.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கான சிகிச்சைகளை மேற்கொள்ள மருத்துவமனைகளை தயார்செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் 13,323 படுக்கைகள் இருப்பதாகவும், 3,018 வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறினார்.
தற்போது கொரோனா அறிகுறிகளுடன் 295 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் கொரோன வைரசின் சமூக பரவலை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருவதாக கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.