பணமதிப்பிழப்பு என்ற தீவிரவாத தாக்குதல் நடைபெற்று 3 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை சாடியுள்ளார்.
பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி, கள்ளநோட்டு மற்றும் கருப்பு பண புழக்கம் போன்றவற்றை ஒழிப்பதற்காக, அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.
இது நாடு முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பால் மக்கள் தங்களிடம் இருந்த மேற்படி நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்தனர்.
இதில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் டெபாசிட் செய்தவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி விசாரணையும் மேற்கொண்டது.
பா.ஜனதா அரசின் இந்த அதிரடி நடவடிக்கை மிகப்பெரும் தோல்வியடைந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் பணமதிப்பு நீக்கம் அமல்படுத்தப்பட்டு இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் கூறியதாவது “நாட்டின் பொருளாதாரத்தை சிதைத்து, லட்சக்கணக்கான சிறு தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்பை பறித்த பணமதிப்பிழப்பு என்ற தீவிரவாத தாக்குதல் நடைபெற்று 3 ஆண்டுகள் ஆகிவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.