உண்மையும், சேவையும் தான் நீதித்துறையின் அடித்தளம் – பிரதமர் மோடி

ஒவ்வொரு நீதிமன்றத்தையும் மின்னணு நீதிமன்றமாக்கி, தொழில்நுட்ப உதவியுடன் விரைவான நீதியை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என  பிரதமர் மோடி உறுதி அளித்திருக்கிறார்.

உச்ச நீதிமன்ற வளாகத்தில், மாறி வரும் உலகச் சூழலில் நீதி பரிபாலனம் என்ற பொருளில் சர்வதேச நீதித்துறை மாநாடு நடைபெறுகிறது.

இரண்டு நாட்கள் நடைபெறும் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, தொழில்நுட்பம் மற்றும் மனித மனசாட்சி ஆகியவை இந்தியாவில் விரைவான நீதி முறையை ஏற்படுத்தும் என நம்புவதாக கூறினார்.

தேசிய நீதித்துறை தரவு முறையை நிறுவுவதும் நீதிமன்ற நடைமுறைகளை எளிதாக்கும் என்றார் அவர்.

காலாவதியான சுமார் 1500 சட்டங்கள் அகற்றப்பட்டு, சமுதாயத்தை வலுப்படுத்தும் பல புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதாக மோடி சுட்டிக்காட்டினார்.

இந்திய அரசியலமைப்பு பாலின நீதிக்கு உத்தரவாதம் அளிக்கிறது என்ற அவர், பாலின சமத்துவம் இல்லாமல் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை எட்ட முடியாது என்று கூறினார்.

பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்த உலகின் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்ற பிரதமர், இராணுவ சேவையில் பெண்களை நியமிப்பது உள்ளிட்ட பல சட்ட மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பல்வேறு மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகள், பிரபல வழக்கறிஞர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே