ஜேப்பியார் கல்வி குழுமம் தொடர்புடைய 30 இடங்களில் 2-வது நாளாக சோதனை

ஜேப்பியார் கல்விக் குழுமம் தொடர்புடைய 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஜே.பங்குராஜ் என்ற ஜேப்பியார்,1988-ம் ஆண்டு கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார்.

அந்த அறக்கட்டளையின்கீழ் தற்போது 15 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ஜேப்பியார் மாமல்லன் பொறியியல் கல்லூரி, சத்யபாமா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, புனித மேரி மேலாண்மை கல்வி நிறுவனம், பனிமலர் பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ஜேப்பியார் கல்விக் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக, பூந்தமல்லி, சூளைமேடு, பழைய மாமல்லபுரம் சாலை, சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி உள்ளிட்ட ஜேப்பியார் கல்வி நிறுவனங்கள் தொடர்புடைய 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று காலையில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனையில் 100-க்கும்அதிகமான அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

ஜேப்பியார் கல்வி குழுமங்களில் நடைபெற்று வரும் இச் சோதனை 2 அல்லது 3 நாட்கள் தொடரக் கூடும் என்று வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோன்று, கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தில் உள்ள ஜேப்பியார் மீன்பிடி துறைமுகம், மூங்கில் விளையில் உள்ள ஜேப்பியார் மருத்துவமனை போன்றவற்றிலும் வருமானவரித் துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

ஜேப்பியார் மீன்பிடி துறைமுகத்துக்கு வருமான வரித் துறையைச் சேர்ந்த 6 அதிகாரிகள் சென்றபோது, துறைமுக ஊழியர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர்.

மீன்பிடி துறைமுக நுழைவு வாயில் மற்றும் உட்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதனால் முட்டம் துறைமுக பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

சோதனையின்போது, மீன் கொள்முதல் செய்ய வந்திருந்த கேரள வியாபாரிகள் அச்சத்துடன் ஓட்டம் பிடித்ததால் மீன் விற்பனை நடைபெறவில்லை. 

வரி ஏய்ப்பு சம்பந்தமாக இந்த சோதனை நடப்படதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று 2 வது நாளாக சோதனை நீடித்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே