கடந்த ஜனவரி மாதம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட வந்த பிரதமர் நரேந்திர மோடி பாம்பனில் புதிய ரெயில் பாலம் கட்டப்படும் என அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ரெயில்வே அமைச்சகத்தின் மூலம் பாம்பன் கடலில் மண் ஆய்வும் நடைபெற்றது.
கடந்த மார்ச் மாதம் கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புதிய பாம்பன் பாலம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிலையில் இன்று பூமி பூஜையுடன் பாலம் கட்டும் பணிகள் தொடங்கின.
250 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள இந்த பாலம் 101 தூண்களைக் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
குஜராத்தைச் சேர்ந்த ரஞ்சித் பில்டர்ஸ் என்ற நிறுவனம் பாலம் கட்டும் பணியை மேற்கொள்கிறது.
பழைய பாலம் போன்றே கப்பல்கள் வந்தால் திறந்து மூடும் வகையில் அமைக்கப்படவுள்ள இந்த பாலத்தின் பணிகளை 2 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது.