இஷான் கிஷன் பிரில்லியண்ட், ஆனால் சூர்யகுமார் யாதவ் ஆட்டத்தில் திருப்தி: ‘நட்டு’-வையும் சிறப்பாகக் குறிப்பிட்ட விராட் கோலி

நட்டு (நடராஜன்) மீண்டும் வந்து மிக முக்கியமான 2 ஓவர்களை வீசினார். ரிஷப் பந்த் கடினமான கட்டத்தில் எப்படி ஆடுவது என்பதை தெரிந்து கொண்டு ஆடுகிறார். இந்தத் தொடரில் இந்திய அணியின் பிளஸ்கள் அதிகம்.

அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி, 5வது டி20 போட்டியில் இங்கிலாந்தை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 3-2 என்று கைப்பற்றிய இந்திய அணியில் தொடர் நாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். ஆட்ட நாயகனாக புவனேஷ்வர் குமார் தேர்வு செய்யப்பட்டார்.

நேற்று ஹைலைட்டான விஷயம் விராட் கோலி, ரோகித் சர்மாவுடன் தொடக்கத்தில் இறங்கியதுதான். ரோகித் வெளுத்து வாங்க, விராட் கோலி நின்றார் பிறகு ரோகித் அவுட் ஆனவுடன் 52 பந்துகளில் 80 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் நின்று இந்திய அணியின் ஸ்கோரை 224 ரன்கள் என்ற வெற்றி ஸ்கோராக மாற்றினார்.

இதனையடுத்து 3 அரைசதங்கள் எடுத்த கோலி தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஆட்டம் முடிந்து பரிசளிப்பு நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:

இது ஒரு முழுநிறைவான போட்டியாகும். பனிப்பொழிவு அதிகாமான போதிலும் எதிரணியை அனைத்து துறைகளிலும் வீழ்த்தினோம். ஷ்ரேயஸ் அய்யர், ரிஷப் பந்த் இறங்காமலேயே 230 ரன்கள் பக்கம் எடுத்தது சாதனைதான். ரோகித் சர்மா கிளாசிக், சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா விளாசினர்.

இவர்களுடன் கூட்டணி அமைத்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆம் ஐபிஎல் தொடரிலும் ஓபனிங் இறங்கப்போகிறேன், முடிந்தால் அப்படியே அதே பார்ம் தொடர்ந்தால் உலகக்கோப்பை டி20 வரையிலும் ஓபனிங் செய்ய தீர்மானித்துள்ளேன்.

இஷான் கிஷன், சூரியகுமார் யாதவின் வருகையும் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அதே போல் அய்யர் முதல் போட்டியிலும் 4வது போட்டியிலும் ஆடியது பிரமாதம். இஷான் கிஷன் பிரில்லியண்ட், ஆனால் நான் குறிப்பாக சூரிய குமார் யாதவ் பேட்டிங்கில் திருப்தி அடைகிறேன். புவனேஷ்வர், ஹர்திக் பாண்டியாவும் நன்றாக மீண்டெழுந்துள்ளார்கள்.

நட்டு (நடராஜன்) மீண்டும் வந்து மிக முக்கியமான 2 ஓவர்களை வீசினார். ரிஷப் பந்த் கடினமான கட்டத்தில் எப்படி ஆடுவது என்பதை தெரிந்து கொண்டு ஆடுகிறார். இந்தத் தொடரில் இந்திய அணியின் பிளஸ்கள் அதிகம்.

டெஸ்ட் தொடருக்குப் பிறகே தாக்கூரின் தன்னம்பிக்கை வானுயர உள்ளது. பேட்டிங்கிலும்தான். முறையான முறையான கிரிக்கெட்டர் அவர். டெஸ்ட்களுக்குப் பிறகு நிறைய டி20 போட்டிகளை ஆடுவதை எதிர்நோக்குகிறோம்.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே