சென்னையில் வேட்பாளர்களை ஆதரித்து ஓபிஎஸ் தேர்தல் பிரச்சாரம்

சென்னை யானைக்கவுனி காவல் நிலையம் அருகில் துறைமுகம் பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் மற்றும் எழும்பூர் தொகுதியில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் ஜான் பாண்டியன் ஆகியோரை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், 2023ஆம் ஆண்டுக்குள் 12 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித்தர திட்டமிட்டு அதில் ஆறரை லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டுக்குள் மீதமுள்ள வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பூரண மது விலக்கு குறித்து முடிவு – ஆ.ராசா

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பூராண மது விலக்கு குறித்து முடிவு எடுப்போம், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்போம் என்று பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுந்தரத்தை ஆதரித்து திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா வாக்கு சேகரித்தார். கூட்டணி கட்சி உறுப்பினர்களுடன் பவானி சாகர் சட்டமன்றத்திற்குட்பட்ட புஞ்சை புளியம்பட்டியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கலை நிகழ்ச்சிகளுடன் திறந்த வேனில் சென்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தீவிர வாக்கு சேகரிப்பு

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதிகுட்பட்ட பகுதிகளில் கலை நிகழ்ச்சிகளுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், திறந்த வேனில் வாக்கு சேகரித்தார். அப்போது, செட்டியார்பட்டி பேரூராட்சியும், சேத்தூர் பேரூராட்சியும் இணைத்து நகராட்சியாக மாற்றி அமைப்பேன் என கூறி இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

தேனி மாவட்டத்தில் அதிமுகவிற்கு மகத்தான வெற்றி கிடைக்கும் பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் ரவீந்திரநாத் பேச்சு

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்ட மன்ற தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெற வேண்டும் என்று போடியில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தெரிவித்தார். முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவருக்கு பட்டாசு மற்றும் மலர்களை தூவி பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தேவேந்திரகுல வேளாளர் என பெயரை மாற்றித் தந்தது அதிமுக தான் – வைகைச்செல்வன்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வைகைச்செல்வன் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அருப்புக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த அவர், தேவேந்திரகுல வேளாளர் என பெயரை மாற்றித் தந்தது அதிமுகதான் திமுக அல்ல என்றார்.

திமுகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ

மதுரை திருமங்கலம் சட்டமன்ற தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ முத்துராமலிங்கம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். மதுரையில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்புவதற்காக விமான நிலையம் வந்த மு.க.ஸ்டாலினை சந்தித்த அவர், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்.

பெண்களுடன் குத்தாட்டம் போட்டு அணைக்கட்டு தொகுதி திமுக வேட்பாளர் நந்தகுமார் வாக்கு சேகரிப்பு

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி திமுக வேட்பாளர் நந்தகுமார் மேள தாளங்கள் முழங்க பெண்களுடன் குத்தாட்டம் ஆடிய படி வாக்கு சேகரித்தார். அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குடபட்ட விரிஞ்சிபுரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நந்தகுமாருக்கு பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அருள் வாக்கு கேட்ட பின் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த ாஜபாளையம் தொகுதி திமுக வேட்பாளர்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்கபாண்டியன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கோவிலுக்கு சென்று அருள்வாக்கு கேட்ட பின், வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, இந்தத் தொகுதியை சேர்ந்த தன்னை உங்க வீட்டு பிள்ளையாய் நினைத்து தேர்ந்தெடுக்க வேண்டுமென உதய சூரியனுக்கு ஆதரவு திரட்டினார்.

திருமயம் தொகுதி திமுக வேட்பாளர் ரகுபதி தீவிர வாக்குசேகரிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் ரகுபதி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். பொன்னமராவதி ஒன்றியத்துக்கு உட்பட்ட செவலூர், கொப்பனப்பட்டி, கொன்னையூர் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், சிறுபான்மை இன மக்களுக்கு பாதுகாப்பு அரண் என்றுமே திமுக-காங்கிரஸ் கூட்டணி தான் எனக் கூறினார்.

விவசாயிகளுக்கு தேவையானது தண்ணீர், மின்சாரமே தவிர இலவசம் அல்ல ராஜபாளையம் தொகுதி வேட்பாளர் ஜெயராஜை ஆதரித்து சீமான் தீவிர பிரச்சாரம்

தமிழகத்தில் மாற்று அரசியலை ஏற்படுத்த வேண்டிய தருணம் இது என்று சீமான் தெரிவித்துள்ளார். ராஜபாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயராஜை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்த அவர், அரசியல்வாதிகள் இலவசங்களை அறிவித்து அடுத்த தேர்தலை பற்றி யோசிப்பார்கள் என்றும், சிறந்த தலைவர்கள் அடுத்த தலைமுறை பற்றி யோசிப்பார்கள் எனவும் கூறினார்.

விவசாயிகளுக்கு தேவையானது அத்தியாவசியமான தண்ணீர் மற்றும் மின்சாரமே தவிர இலவசங்கள் இல்லை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

மயிலாடுதுறை தொகுதி பாமக வேட்பாளரை ஆதரித்து ஜி.கே.வாசன் வாக்கு சேகரிப்பு

மயிலாடுதுறை மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையான தனி மாவட்டத்தை ஏற்படுத்தி கொடுத்தது அதிமுக அரசு என்றும் வரும் நாட்களில் மயிலாடுதுறை மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக மாற்ற மயிலாடுதுறை தொகுதி அதிமுக கூட்டணி கட்சியான பாமக வேட்பாளர் பழனிச்சாமிக்கு வாக்கு அளிக்க கோரி தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம் செய்தார். மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம், புறவழிச்சாலை, தொழில்பேட்டை ஆகியவை அமைக்க பழனிச்சாமி முயற்சிப்பார் என்று சின்னக்கடை வீதி பகுதியில் ஜி.கே. வாசன் வாக்கு சேகரித்தார்.

பூந்தமல்லி தனி தொகுதியில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

சென்னையை அடுத்த பூந்தமல்லி தனி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எம்எல்ஏ கிருஷ்ணசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கோயிலில் சாமி தரிசனம் செய்த பின், வீதி வீதியாக சென்ற அவர் திறந்த வேனில் வாக்கு சேகரித்தார். அப்போது, பூந்தமல்லி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் என கூறி உதய சூரியனுக்கு ஆதரவு திரட்டினார்.

நல்ல திட்டங்கள் இருந்தால் இலவசங்கள் தேவையில்லை – ம.நீ.ம. வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து கமல்ஹாசன் வாக்கு சேகரிப்பு

நல்ல திட்டங்கள் இருந்தால் இலவசங்கள் கொடுக்க தேவையில்லை என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார். கோவை பீளமேடு ரொட்டிக் கடை மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் டாக்டர் மகேந்திரனை ஆதரித்து வாக்கு சேகரித்த கமல்ஹாசன் விவசாயத்தை விஞ்ஞ்சானிகள் கையில் கொடுக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் கையில் கொடுக்கக் கூடாது என்றும் தெரிவித்தார். ஊழலில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க வரும் 6 ஆம் தேதி சுதந்திர போர் நடக்க உள்ளது என்றும் கமல் குறிப்பிட்டார்.

திருவாரூர் அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் கூட்டணி கட்சியினருடன் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பு

திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பன்னீர்செல்வம் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். திருவாரூர் சாய்பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், பிரச்சார வாகனத்திற்கு பூஜை செய்தார்.பின்னர் கூட்டணி கட்சியினருடன் வீதி வீதியாகச் சென்று பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்தார்.

திருமயம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நூதன முறையில் பிரச்சாரம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சிவராமன்தாரை தப்பட்டைகள் முழங்க மயிலாட்டம்,பொய்க்கால் குதிரையாட்டத்துடன் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்று நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். புதுப்பட்டி, அண்ணா சிலை, நாட்டுக்கல் ரோடு, வளையப்பட்டி ஆகிய பகுதிகளில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

வரும் தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தை ஸ்டாலின் மீட்டெடுப்பார் – அரியலூர் தொகுதி மதிமுக வேட்பாளரை ஆதரித்து கி.வீரமணி பிரச்சாரம்

வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தை ஸ்டாலின் மீட்டு எடுப்பார் என்று அரியலூர் தொகுதி மதிமுக வேட்பாளர் சின்னப்பாவை ஆதரித்து திராவிட கழக தலைவர் கி.வீரமணி பிரச்சாரம் செய்தார். திமுக, மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து கி.வீரமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தமிழகத்திற்கு தடையில்லா மின்சாரம் வழங்கியது அதிமுக அரசு வேப்பனப்பள்ளி அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமி தீவிர வாக்கு சேகரிப்பு

தமிழகத்தில் தடையில்லா மின்சாரத்தை வழங்கியது அதிமுக அரசு என்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளிகள் அதிமுக ஆட்சியில் தான் உருவாக்கப்பட்டு உள்ளது என்று வேப்பனப்பள்ளி அதிமுக வேட்பாளரும், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி பிரச்சாரம் செய்தார். வேப்பனப்பள்ளி தொகுதிக்கு உட்பட்ட நல்லூர், சின்னகொத்தூர், கெத்தகிருஷ்ணபள்ளி, குரியனப்பள்ளி,கரியசந்திரம், கங்கோஜிகொத்தூர், தோவர்குந்தாணி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்த அவருக்கு பெண்கள் வரிசையில் நின்று ஆரத்தி எடுத்தனர்.

விவசாயிகளுக்கு பிரச்சனை ஏற்பட்டால் மனம் வேதனை கொள்கிறது – மயிலாடுதுறை பாமக வேட்பாளர் பழனிச்சாமியை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம்

தான் ஒரு விவசாயி என்பதாலே விவசாயிகளுக்கு ஒரு பிரச்சினை என்றால் மனவேதனை ஏற்படுகிறது என்று கூறி மயிலாடுதுறை தொகுதி பாமக வேட்பாளர் பழனிச்சாமிக்கு ஆதரவாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிரச்சாரம் செய்தார். மயிலாடுதுறை தொகுதிக்குட்பட்ட குத்தாலம் மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். விவசாயிகள் மீது கொண்டு உள்ள அக்கறையால் தான் டெல்டா மாவட்டம் பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தனி நீதிமன்றம் – காங்கேயம் திமுக வேட்பாளர் சாமிநாதனை ஆதரித்து கனிமொழி பிரச்சாரம்

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க மாவட்டந்தோறும் தனி நீதிமன்றம், தமிழர்களுக்கு புதிய வேலைவாய்ப்புத் திட்டம், உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கி காங்கேயம் தொகுதி திமுக வேட்பாளர் சாமிநாதனை ஆதரித்து மாநிலங்கவை எம்.பி. கனிமொழி பிரச்சாரம் செய்தார். காங்கேயம் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளக்கோவில் மற்றும் பல்வேறு பகுதிகளில் கனிமொழி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சாத்தூர் தொகுதியை வளர்ச்சி பகுதியாக மாற்றக்கூடியவர் அதிமுக வேட்பாளர் ரவிச்சந்திரன் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாக்கு சேகரிப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியை வளர்ச்சி மிகுந்த பகுதியாக மாற்ற அதிமுக வேட்பாளர் ரவிச்சந்திரனுக்கு வாக்கு அளிக்க கோரி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரம் செய்தார். சாத்தூர் சட்டமன்ற தேர்தலுக்கான கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ரவிச்சந்திரனை ஆதரித்து கூட்டணி கட்சியினருடன் சென்று வாக்கு சேகரித்தார்.

வேதாரண்யம் தொகுதியில் மேள தாள, வாண வேடிக்கையுடன் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பட்டாசு வெடித்தும், மேள தாளங்கள் மற்றும் நடன கலைஞர்களின் ஆட்டத்துடன் திமுக வேட்பாளர் வேதரத்தினம் வாக்கு சேகரித்தார். மருதூர், தகட்டூர், தாணிக்கோட்டகம், கரியாப்பட்டினம், வடமழைமணக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி கட்சி உறுப்பினர்களுடன் துண்டு பிரசுரங்கள் வழங்கி வேதரத்தினம் ஆதரவு திரட்டினார்.

ராமநாதபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பு

ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் காதர்பாட்சா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரண்மனை, வழிவிடு முருகன் கோயில்,வண்டிக்கார தெரு உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி கட்சியினருடன் வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்த அவர், துண்டு பிரசுரங்களை வழங்கி உதய சூரியனுக்கு ஆதரவு திரட்டினார்.

ஆவடி தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் பாண்டியராஜன் பிரச்சாரம்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் பாண்டியராஜன் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆவடியில் 50 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாகக் கூறிய பாண்டியராஜன், ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் எனத் தெரிவித்தார். திமுக தலைவர் ஸ்டாலின் குறித்தும் அவர் விமர்சித்தார்.

கீழ்பெண்ணாத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் பிச்சாண்டியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பிரச்சாரம்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிச்சாண்டியை ஆதரித்து திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வாக்குசேகரித்தார். திருக்கோவிலூர் சாலையில் உள்ள கலைஞர் திடலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய எ.வ.வேலு, 100 ஆண்டு கால திராவிட கட்சியை அழிக்க எந்த கொம்பனும் பிறக்கவில்லை என்று அவர் கூறினார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நடிகை விந்தியா பிரச்சாரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல், நத்தம், வேடந்தூர், ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், வி.வி.பி பரமசிவம் ஆகியோரை ஆதரித்து நடிகை விந்தியா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மின்வெட்டு மாநிலமாக இருந்த தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றியது அதிமுக அரசு தான் எனத் தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் ஆட்சி அமைப்பார் – குமாரபாளையம் தொகுதியில் அமைச்சர் தங்கமணி பிரச்சாரம்

வரும் தேர்தலில் வெற்றிப்பெற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று குமாரபாளையம் தொகுதியில் போட்டியிடும் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட மோகனூரில் அதிமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், பொதுமக்களிடம் குறைகள் கேட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனுக்கள் பெற்றது குறித்து விமர்சித்தார்.

அதிமுக சார்பில் போட்டியிடும் சு.ரவியை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் வாக்குசேகரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தனி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சு.ரவியை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சயனபுரம் கிராமத்தில் பேசிய அவர், தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு விவசாயி முதலமைச்சராக உள்ளதாகக் கூறினார். இந்த தேர்தல் விவசாயிக்கும், வியாபாரிக்குமான தேர்தல் என அவர் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் தொகுதி பாமக வேட்பாளர் மகேஷ் குமார் மற்றும் உத்திரமேரூர் அதிமுக வேட்பாளர் சோமசுந்தரம் ஆகியோரை ஆதரித்தும் அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரித்தார்.

நீண்ட நாள் கோரிக்கையான கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் – முதுகுளத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் தீவிர பிரச்சாரம்

வைகை – பரளையாறு – குண்டாறு இணைப்பு பாசனத் திட்டம் மற்றும் கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறி முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் வாக்கு சேகரித்தார். முதுகுளத்தூர் தொகுதிக்குட்பட்ட கமுதி, கடலாடி, சாயல்குடி, பெருநாழி, சிக்கல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

வாக்கு சேகரிக்க வந்தபோது செய்யாறு அதிமுக வேட்பாளர் தூசி மோகனுக்கு எதிர்ப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தூசி மோகன் வாக்கு சேகரிக்க வந்தபோது இளைஞர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. வெம்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட சுமங்கலி கிராமத்திற்கு சென்ற போது தங்கள் கிராமத்திற்கு அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை எனக் கூறி இளைஞர்கள் அவரை முற்றுகையிட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே