பிரிட்டானியா ரஸ்க்கில் இரும்பு போல்டு..! கலெக்டரிடம் புகார்

கரூர் பேருந்து நிலையத்தில் விற்கப்பட்ட பிரிட்டானியா நிறுவன ரஸ்க்கில், இரும்பு போல்டு இருந்ததாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் ஜெகதாபி அடுத்த பொராணி கிராமத்தை சேர்ந்த விவேகானந்தன் என்பவர் கையில் பிரிட்டானியா நிறுவன ரஸ்க் பாக்கெட்டுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வந்தார்.

விவேகானந்தன் தான் கையில் வைத்திருந்த ரஸ்க் ஒன்றில் இரும்பு போல்ட் ஒன்று இருப்பதை செய்தியாளர்களிடம் சுட்டிக்காட்டினார். கரூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் பிரிட்டானியா ரஸ்க் பாக்கெட் வாங்கியதாகவும், அந்த பாக்கெட்டில் இருந்து ஒரு ரஸ்கை எடுத்து சாப்பிட்ட போது அதில் இருந்த இரும்பு போல்ட் பல்லில் கடிபட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து புகார் மனு அளித்ததாக விவேகானந்தன் தெரிவித்தார்.

பேருந்து நிலையங்களில் விற்கப்படும் பெரும்பாலான பொருட்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி போன்றவை இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வந்த நிலையில், பிரபல நிறுவனமான பிரிட்டானியா ரஸ்க்கில் உயிருக்கு ரிஸ்க்கை உண்டாக்கும் வகையில், இரும்பு போல்ட் இருந்தது பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களின் தரத்தின் மீதும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எந்திரத்தின் உதவியுடன் ரஸ்க்கிற்கான மாவு கலக்கப்பட்டாலும் பல்வேறு நிலைகளில் பணியாளர்களின் பார்வையில், குறிப்பாக பல்வேறு தரக்கட்டுப்பாட்டிற்கு பின்னரே விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். பிரிட்டானியா நிறுவன ரஸ்க்கில் போல்ட் கலந்தது எப்படி? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், மாவு கலக்கும் எந்திரத்தில் இருந்து கழன்று விழுந்திருக்கலம் என்கின்றனர் அதிகாரிகள்.

இருந்தாலும் விவேகானந்தனின் புகார் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாக்கெட்டில் அடைத்து விற்பனைக்கு வரும் எந்த ஒரு உணவுப் பொருளையும் தெளிவாகப் பார்த்த பின்னரே சாப்பிட வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் சமீபத்திய உதாரணம்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 401 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே