கமலுடன் இணைய தயார் – ரஜினிகாந்த்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து, ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து நிதர்சனமான உண்மை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்களின் நன்மைக்காக கமலுடன் இணைந்து செயல்பட தயார் என்று ரஜினியும் கூறியுள்ளார்.

அண்மையில், சென்னையில் நடைபெற்ற கமல்60 என்ற விழாவில் பேசிய ரஜினிகாந்த், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் முதலமைச்சராவார் என கனவில்கூட நினைத்திருக்க மாட்டார் என்று கூறியிருந்தார்.

மேலும் எடப்பாடி பழனிசாமி அரசு கவிழ்ந்துவிடும் என்று பலரும் பேசிய நிலையில் அதிசயமாகவும் அற்புதமாகவும் அவரது ஆட்சி நீடிப்பதாக ரஜினி தெரிவித்திருந்தார். ரஜினியின் இந்த பேச்சுக்கு அதிமுக தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்தது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ரஜினிக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமலிடம், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானது குறித்து ரஜினியின் விமர்சனத்திற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவிப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த கமல், ரஜினிகாந்த் கூறியது விமர்சனம் அல்ல, நிதர்சனமான உண்மை என்றார்.

மேலும், மக்கள் நலனுக்காக ரஜினியுடன் இணைந்து பயணிக்கத் தயார் என்றும் கமல் கூறினார். இதனைத் தொடர்ந்து, சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக கோவா சென்ற ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மக்களுடைய நலனுக்காக கமலுடன் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம் என கூறினார்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே