பாதுகாவலரை கொலை செய்த வழக்கில் மூவர் கைது

காரைக்கால் அடுத்த வாஞ்சூரிலுள்ள தனியார் மதுபான விடுதியில் ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் பனங்குடி சேர்ந்த விமல்ராஜ், காரைக்கால் அடுத்த வாஞ்சூரில் இயங்கி வரும் தனியார் மதுபான விடுதியில் இரவு பாதுகாவலராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 16ம் தேதி இரவு தாமதமாக வேலைக்கு சென்றதால் விடுதி மேலாளர் மனோஜிற்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைக்கலப்பானது. இதனைக் கண்டு அங்கு பணியிலிருந்த ஊழியர்கள் கோபால் மற்றும் அலெக்சாண்டர் ஆகியோரும் விமல்ராஜை மடக்கி பிடிக்க அருகிலிருந்த மரக்கட்டையை கொண்டு மேலாளர் மனோஜ் விமல்ராஜை தாக்கியுள்ளார்.
இதில் மயக்கமுற்ற விமல்ராஜ் அதிகாலை தனது நண்பருடன் வீட்டிற்கு சென்றுள்ளார். 17ம் தேதி காலை மூச்சு திணறல் உள்ளது என நாகூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்ற விமல்ராஜ், பின்னர் வீட்டிற்கு திரும்பியுள்ளார். பின்னர் மதியம் மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் நாகை அரசு பொது மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைக்கப்பட்டுள்ளார். நாகை மருத்துவமனைக்கு சென்ற விமல்ராஜின் உடலை சோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து விமல்ராஜின் சகோதரர் பக்கிரிசாமி அளித்த புகாரின் பேரில் திருப்பட்டினம் போலீசார் தனியார் மதுபான விடுதியின் மேலாளர் மனோஜ் மற்றும் ஊழியர்கள் கோபால், அலெக்சாண்டர் ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 398 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே