கிரிக்கெட் டெஸ்ட் போட்டி – இந்திய அணி அபார வெற்றி..!

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் ஆனது.

மயங்க் அகர்வால் இரட்டை சதம் விளாசினார். ரோகித் சர்மா சதம் அடித்தார்.பின்னர் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 431 ரன்களில் ஆட்டமிழந்தது.

அதிகபட்சமாக அஸ்வின், 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 71 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை ஆடிய இந்திய அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்கள் எடுத்திருந்த போது, டிக்ளேர் செய்யப்பட்டது.

இந்த இன்னிங்சிலும் ரோகித் சர்மா சதம் அடித்து சாதனை படைத்தார்.

பின் தங்கிய ரன்களையும் சேர்த்து, 395 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி விளையாடியது.

இந்திய அணி வீரர்களின் அபார பந்துவீச்சில் திணறிய அந்த அணி 100 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

முத்துசாமி, டேன் பீட் ஆகியோர் மட்டும் நிதானமாக ஆடி, அணியின் தோல்வியை சற்று நேரம் தள்ளி போட்டனர். இறுதியில் அந்த அணி 191 ரன்களில் ஆல் அவுட்டானது.

இதன் மூலம், 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது சமி 5 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இந்த இன்னிங்சில் தியூனிஸ் டி ப்ரூயின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட் டெஸ்டில் 350 விக்கெட்டுகளை கைப்பற்றி அஸ்வின் சாதனை படைத்தார்.

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான முத்தையா முரளிதரனைப் போலவே, 66 போட்டிகளில் 350 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், அவரது உலக சாதனையை அஸ்வின் சமன் செய்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே