மதுரையில் காவலர்கள் மூவரை அரிவாளால் வெட்டிய ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை சர்வோதய பிரதான சாலையில் அதிகாலை மதுபோதையில் ஒருவர் ரகளையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்கு காவலர்கள் ராமலிங்கம், செந்தில்குமார், சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
பின்னர் ரகளையில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனரை அவர்கள் பிடிக்க முயன்றனர். அப்போது தான் வைத்திருந்த அரிவாளால் ஆட்டோ ஓட்டுனர், காவலர்கள் மூவரையும் தாக்கினார்.
இதில் கை, கால்களில் அவர்களுக்கு வெட்டு காயம் ஏற்பட்டது.
ஆனாலும் போராடி அந்த நபரை பிடித்த போலீசார், காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணைக்கு பின் கைது செய்தனர். இதையடுத்து, காயமடைந்த காவலர்கள் மூவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.