இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 1.30க்கு தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, முதலில் விளையாடிய டெஸ்ட் தொடரில் 1-3 என்ற கணக்கிலும், அடுத்து நடந்த டி20 தொடரில் 2-3 என்ற கணக்கிலும் மண்ணைக் கவ்வியது. இந்நிலையில் இந்த 2 அணிகளும் மோதும் 3 ஆட்டங்களை கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த 3 ஆட்டங்களும் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க அரங்கில் மார்ச் 23, 26, 28 தேதிகளில் நடைபெறும். கொரோனா பீதி காரணமாக ஆட்டங்கள் அனைத்தும் ரசிகர்கள் இன்றி பூட்டிய அரங்கில் நடக்க உள்ளன. ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை இரு அணிகளும் இங்கிலாந்தில் 2019ல் நடந்த ஐசிசி உலககோப்பை ஒருநாள் தொடரில்தான் கடைசியாக மோதின.
அதன் பிறகு இப்போது தான் மோத உள்ளன. அந்தப் போட்டியில் இந்தியா 31 ரன் வித்தியாசத்தில் தோற்றது. இங்கிலாந்தை முதல் முறையாக சாம்பியனாக்கிய அந்தத் தொடரில் கேப்டன் இயான் மோர்கன் தலைமையிலான அணியில் இருந்த அதிரடி வீரர்கள் எல்லோரும் இப்போதும் அணியில் தொடர்கின்றனர். அது அந்த அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும். டெஸ்ட், டி20 தொடர்களை இழந்தாலும் உலக சாம்பியனான இங்கிலாந்து, ஒருநாள் தொடரையாவது கைப்பற்ற முயற்சி செய்யும். அதே நேரத்தில் இந்திய அணிக்காக அப்போது விளையாடிய முகமது ஷமி, பும்ரா, டோனி, கேதர் ஜாதவ் என பலரும் இப்போது அணியில் இல்லை. ஆனால், இந்திய அணியில் இப்போது அதிரடியாக விளையாடும் புதுமுகங்கள் இருக்கின்றனர். அனுபவ வீரர்களும் அசத்துவதால்தான் டெஸ்ட், டி20 தொடர்களை இந்தியா கைப்பற்ற முடிந்தது.
அதே வேகத்தில் ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்ற முனைப்புக் காட்டும். இளம் வீரர்கள் கில், பிரித்வி, படிக்கல் ஆகியோர் வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், பார்மை இழந்து தவித்து வரும் தொடக்க வீரர் ஷிகர் தவான் கணிசமாக ரன் குவிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளாார். டி20 தொடரில் அதிக ரன் குவித்து தொடர் நாயகன் விருது பெற்ற கேப்டன் கோஹ்லி, ஒருநாள் தொடரிலும் அதிரடியைத் தொடர்வார் என எதிர்பார்க்கலாம். இளம் வேகம் பிரசித் கிருஷ்ணாவை துருப்புச்சீட்டாக களமிறக்க திட்டமிட்டுள்ளார் கோஹ்லி. இரு அணிகளுமே தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் வரிந்துகட்டுவதால், ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி. இந்தியா: கோஹ்லி (கேப்டன்), ரோகித், தவான், கில், ராகுல், பன்ட், ஹர்திக், சூரியகுமார், ஷ்ரேயாஸ் அய்யர், வாஷிங்டன், சாஹல், குல்தீப், புவனேஷ்வர், சிராஜ், நடராஜன், தாகூர், க்ருணால் பாண்டியா, பிரசித் கிருஷ்ணா. இங்கிலாந்து: இயான் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, பேர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், பட்லர், சாம் கரன், டாம் கரன், லிவிங்ஸ்டோன், மேட் பார்கின்சன், அடில் ரஷித், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, மார்க் வுட்.