ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஓபனிங்: கோலி உறுதி- இன்று புனேயில் முதல் ஒருநாள் போட்டி

ஒரு தனிப்பட்ட வீரர் (ராகுல்) பார்மில் இல்லை என்றால் அவர் விளையாடுவதை மறந்து விட்டார் என்று அர்த்தமல்ல. மனரீதியான தெளிவு இல்லாமல் இருந்திருக்கலாம். அப்படித்தான் அதைப் பார்க்க வேண்டும்.

புனேயில் இன்று இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் ஹிட்மேன் ரோகித் சர்மாவுடன் ஷிகர் தவான் இறங்குவார் என்று விராட் கோலி உறுதி செய்துள்ளார்.

இன்று மதியம் 1.30 மணிக்கு பகலிரவு ஆட்டமாக இது நடைபெறுகிறது. ஷிகர் தவான் ஒருநாள் போட்டிகளில் சுமாராக ஆடிவருகிறார். கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அவர் 74, 30, 16 என்று ரன்கள் எடுத்துள்ளார். ஆனால் விஜய் ஹசாரே டிராபியில் 118 பந்துகளில் 153 என்றும் 44 பந்துகளில் 50 என்றும் எடுத்து தன்னை தக்கவைத்துள்ளார். அடுத்த கட்டத்துக்கு நகராமல் இவரையே பிடித்து கோலி ஏன் தொங்குகிறார் என்று தெரியவில்லை. ரிஷப் பந்த்தை தொடக்கத்தில் இறக்கி 2023 ஐசிசி உலகக்கோப்பைக்குள் அவரை ஒரு பெரிய ஜெயசூரியாவாக மாற்றிப்பார்க்கலாமே.

இந்நிலையில் இது தொடர்பாக கோலி கூறியதாவது:

இரண்டு விஷயங்களை நாங்கள் கூர்ந்து கவனிக்கப் போவதாக எங்களுக்குள் விவாதித்துக் கொண்டோம். தொடக்கத்தைப் பொறுத்தவரை ஷிகர் தவான், ரோகித் இறங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பிரமாதமாக ஆடிவருகின்றனர்.

மேலும் ஒருநாள் போட்டிக்கான அணியில் சிலபல இளம் வீரர்களும் வாய்ப்பு பெற காத்திருக்கின்றனர். இவர்கள் வலுவான இங்கிலாந்துக்கு எதிராக எப்படி தங்களின் திறமையை வெளிப்படுத்துகின்றனர் என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறோம்.

ஒரு தனிப்பட்ட வீரர் (ராகுல்) பார்மில் இல்லை என்றால் அவர் விளையாடுவதை மறந்து விட்டார் என்று அர்த்தமல்ல. மனரீதியான தெளிவு இல்லாமல் இருந்திருக்கலாம். அப்படித்தான் அதைப் பார்க்க வேண்டும். இது எளிமையான ஒரு ஆட்டம், பந்தை நன்றாக உற்றுக்கவனி அடி அவ்வளவுதான். அந்தக் கணத்தில் இருக்க வேண்டும் மற்றவையெல்லாம் வெளியில் பேசப்படுவதுதான். ராகுல் பார்ம் பற்றி பேசுவதெல்லாம் முற்றிலும் பொருளற்றவை.

என் விளையாட்டு வாழ்க்கையில் முதல் நாள் முதல் கடைசி நாள் வரை வெளியில் பேசப்படுவதெல்லாம் பொருளற்றவைதான். எங்களுக்குள் புற விஷயங்கள் நுழைய அனுமதிக்க மாட்டோம். வீரர்களுக்கு பாதுகாப்பு வழங்கி அவர்களுக்கு ஒரு நல்ல நிம்மதியான மனவெளியை வழங்குவதே திட்டம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி, பிறகு இங்கிலாந்தில் தொடர் குறித்து…

ஐபிஎல் ஏப்ரல் 9ம் தேதி தொடங்குகிறது, பிறகு ஜூன் 18 முதல் ஏஜியஸ் பவுலில் நியூஸிலாந்துடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி. பிறகு ஆகஸ்ட் 4 முதல் செப்.10 வரை இங்கிலாந்தில் 5 டெஸ்ட்கள் கொண்ட தொடர்.

“ஷெட்யூல் பற்றி நாம் எதுவும் கூற முடியாது, அது நம் கையில் இல்லை, இருந்தாலும் வீரர்களுடன் கலந்தாலோசித்துத்தான் ஷெட்யூல் போட வேண்டும். அப்போதுதான் பணிச்சுமையை மேலாண்மை செய்ய முடியும். அதுவும் கோவிட் 19 கட்டுப்பாடுகள் மனரீதியான அயற்சியை ஏற்படுத்துகிறது.

ஆகவே வீரர்களுடன் பேசிவிட்டுத்தான் தொடரை முடிவு செய்ய வேண்டும், இன்னும் கொஞ்ச காலத்துக்கு பயோ-பபுள் எனப்படும் கொரோனா பாதுகாப்பு வலையத்துக்குள்தான் வீரர்கள் வாழ வேண்டும் என்பதால் நிச்சயம் வீரர்களை கலந்தாலோசிக்காமல் தொடரை முடிவு செய்யக் கூடாது.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

இந்திய ஒருநாள் அணி வருமாறு: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, ஷ்ரேயஸ் அய்யர், ரிஷப் பந்த், ராகுல், குருணால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர, ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாக்கூர், சாஹல், குல்தீப் யாதவ், டி.நடராஜன்.

இங்கிலாந்து: ஜேசன் ராய், பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ், மோர்கன், பட்லர், சாம் பிலிங்ஸ், மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டன், சாம் கரன், டாம் கரன், ஆதில் ரஷீத், ரீசி டாப்லி, மார்க் உட்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே