வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், தற்போது இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 346 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

இந்தியா – வங்காளதேசம் அணிகள் இடையேயான 2 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் டெஸ்ட் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் செய்தது.

இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்காளதேசம் 58.3 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்சில் சுருண்டது.

இதையடுத்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வாலும் ரோகித் சர்மாவும் களம் இறங்கினர்.

ரோகித் சர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.

முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் சேர்த்தது. புஜாரா 43 ரன்னுடனும், மயங்க் அகர்வால் 37 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது.

நிதானமாக ஆடிய புஜாரா அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து வந்த கேப்டன் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமலேயே வெளியேறினார்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மயங்க் அகர்வால் டெஸ்ட் போட்டிகளில் தனது 3-வது சதத்தை பதிவு செய்தார்.

150 ரன்களை கடந்த பின்னர் மயங்க் அகர்வால் பேட்டை உயர்த்தி காட்டியதும், கோலி 200 ரன்கள் அடிக்குமாறு சைகை செய்தார்.

இதனை அடுத்து, தனது கட்டை விரலை உயர்த்தி அகர்வாலும் சைகை காட்டினார்.

தற்போது இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 346 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

அகர்வால் 185 ரன்களுடனும், ஜடேஜா 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே