இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் தேர்தலில் போட்டியிட முடியாது – உபி.யில் வருது புது சட்டம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெறவுள்ள பஞ்சாயத்து தேர்தலில் சில முக்கிய மாற்றங்கள் செய்ய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2011 ஆம் ஆண்டு மத அடிப்படையில் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121.09 கோடியாக உள்ளது. அதில், இந்துக்கள் 96.63 கோடி பேரும், இஸ்லாமியர்கள் 17.22 கோடி பேரும், கிறிஸ்தவர்கள் 2.78 கோடி பேரும் உள்ளனர். அதேபோல், சீக்கியர்கள் 2.08 கோடி பேரும், புத்த மதத்தினர் 84 லட்சம் பேரும், சமண மதத்தினர் 45 லட்சம் பேரும், பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் 79 லட்சம் பேரும், எந்த மதத்தையும் சாராதவர்கள் 29 லட்சம் பேரும் உள்ளனர்.

2001 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் இஸ்லாமியர்களின் மக்கள் தொகையானது 0.8 சதவீதம் அதிகரித்து 13.8 கோடியிலிருந்து 17.22 கோடியாக அதிகரித்துள்ளதாகவும், இந்துகளின் மக்கள் தொகை எண்ணிக்கை 0.7 சதவீதம் குறைந்து 96.63 கோடியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சிறுபான்மையினருக்கான தேர்தல் உரிமைகளை பறிக்கும் வகையில் உத்தரப்பிரதேச மாநில ஆளும் பாஜக அரசு திட்டம் ஒன்றை தீட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, உத்தரப்பிரதேச மாநில பஞ்சாயத்து தேர்தலில் இரண்டிற்கும் அதிகமான குழந்தைகள் பெற்றவர்கள் போட்டியிட தடை விதிக்கும் வகையில் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் திருத்தம் செய்ய அம்மாநில அரசு ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

முன்னதாக, மக்கள் தொகை அதிகரிப்பால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சிறுபான்மையினர், பெரும்பான்மையினராகி வருவதாக அகில இந்திய சாதுக்கள் சபையின் தலைவர் மஹந்த் நரேந்திர கிரி கருத்து தெரிவித்திருந்தார். மேலும், இது தொடர்பாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய இணைய அமைச்சரும் உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவருமான சஞ்சீவ் பலியானும் முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். அதன் தொடர்ச்சியாகவே, இதுகுறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசித்து வருவதாகவும், இதன் மீதான முடிவு விரைவில் எடுக்கப்படும் எனவும் தெரிகிறது.

மேலும், இதுபற்றி உத்தரப்பிரதேச மாநிலப் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் பூபேந்தரா சிங் சவுத்ரி, முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து இது தொடர்பாக ஆலோசனையும் நடத்தியுள்ளார். அப்போது, நடப்பாண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் பஞ்சாயத்து தேர்தலை ஒத்தி வைக்கவும் அவர்கள் ஆலோசித்ததாக தெரிகிறது.

மக்கள்தொகை கட்டுப்பாட்டு சட்டம் பாஜகவின் கருத்தியல் மற்றும் அரசியல் கொள்கையின் ஒரு பகுதியாக கருதப்படும் நிலையில், தேர்தல் யுக்தியாக சிறுபான்மையினரை குறி வைத்து அவற்றை கொண்டு வர பாஜக திட்டமிடுவது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம், பஞ்சாயத்து தேர்தல் மட்டுமல்லாமல் சட்டப்பேரவை, மக்களை பொதுத் தேர்தல்களிலும் பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையான, வேட்பாளர்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி, குற்றப்பிண்ணனி உள்ளிட்டவற்றையும் கருத்தில் கொள்ள பாஜக அரசு முன்வர வேண்டும் என்றும், அதனை விடுத்து சிறுபான்மையினரை மட்டும் குறி வைத்து பாஜகவினர் திட்டமிடுவது சரியான அணுகுமுறையாக இருக்காது என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே