ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவின் தடுப்புக்காவல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசு, அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிந்தது.
இதைத்தொடர்ந்து காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டனர்.
தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரான பரூக் அப்துல்லா, பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் 7 மாதங்களுக்குப் பிறகு அவரை விடுவித்து, ஜம்மு காஷ்மீர் அரசு உத்தரவிட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்தானதை அடுத்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய மாநாட்டு கட்சித் தலைவர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
பின்னர், மூவர் மீதும் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பி வருவதால் அங்கு வீட்டுக்காவலில் உள்ள அரசியல் தலைவர்கள் விரைவில் விடுதலை கிடைக்கவும், காஷ்மீர் மேம்பாட்டிற்காக அவர்கள் பாடுபட வேண்டும் என்றும் வேண்டிக் கொள்வதாக அண்மையில் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.