உண்மையான விவசாயியாக இருந்தால் 3 வேளாண் சட்டங்களை ஏன் எதிர்க்கவில்லை?- முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் கேள்வி

காவிரி உரிமையை மீட்டுக் கொடுத்து ஐம்பதாண்டு காலம் காப்பாற்றியவர் நம்முடைய தலைவர் கலைஞர். அந்த உரிமையை இப்போது மத்திய அரசின் ஜல்சக்தித் துறையிடம் அடமானம் வைத்திருப்பவர்தான் முதல்வர் பழனிசாமி. அவர் நம்முடைய தலைவரைப் பார்த்து துரோகம் செய்துவிட்டார் என்று பேசுகிறார். தலைவரைப் பற்றிப் பேசினால் அவர் நாக்கு அழுகிவிடும் என ஸ்டாலின் பேசினார்.

ஒரத்தநாட்டில் பொதுமக்களிடையே இன்று ஸ்டாலின் உரையாற்றி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:

“தலைவர் கருணாநிதி பிறந்த மாவட்டத்திற்கு வந்திருக்கிறேன். கோயிலில் பெரிய கோவில் நம்முடைய தஞ்சை கோயில்தான். அணைகளில் சிறந்தது கல்லணை. தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சை. தமிழரின் கோட்டையாக விளங்கிக் கொண்டிருப்பதும் தஞ்சைதான். எனவே அந்தக் கோட்டைக்கு நான் வந்திருக்கிறேன்.

இந்த தஞ்சை கோட்டையில் தலைவரின் கால்படாத இடமே இருக்க முடியாது. அப்படிப்பட்ட தலைவர் கருணாநிதியை முதல்வர் பழனிசாமி டெல்டா விவசாயிகளுக்கு கருணாநிதி துரோகம் செய்துவிட்டார் என்று பேசியிருக்கிறார். பழனிசாமி அவர்களே உங்கள் நாக்கு அழுகிப் போய் விடும். யாரைப் பார்த்து அவ்வாறு பேசுகிறீர்கள்?

காவிரி உரிமையை மீட்டுக் கொடுத்து ஐம்பதாண்டு காலம் காப்பாற்றியவர் நம்முடைய தலைவர் கலைஞர். அந்த உரிமையை இப்போது மத்திய அரசின் ஜல்சக்தித்துறையிடம் அடமானம் வைத்திருப்பவர்தான் முதல்வர் பழனிசாமி. அவர் நம்முடைய தலைவரைப் பார்த்து துரோகம் செய்துவிட்டார் என்று பேசுகிறார். அவர் பேசலாமா?

தலைவர் கருணாநிதியைப் பார்த்து தஞ்சை மண்ணுக்கு துரோகம் செய்துவிட்டார் என்று பேசுகிறார் என்று சொன்னால் இதை விடக் கொடுமை எதுவும் இருக்க முடியாது. மேகதாது அணை கட்ட வேண்டும் என கர்நாடக மாநிலத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பிரதமரைச் சந்தித்து போர்க்கொடி தூக்கினார்கள். ஆனால் தமிழ்நாட்டிற்கு என்ன ஆபத்து என்பதைப் பற்றிக் கொஞ்சம் கூட இங்கிருக்கும் ஆட்சி கவலைப்படவில்லை.

எனவே காவிரிக் கரையில் பிறந்து, காவேரி மருத்துவமனையில் உயிர் பிரிகிற வகையில் காவிரி உரிமைக்காகப் போராடிய தலைவர்தான் நம்முடைய தலைவர் கலைஞர். தயவுசெய்து இப்படி எல்லாம் பழனிசாமி பேசக்கூடாது. அப்படிப் பேசினால் அவருடைய நாக்கு அழுகித்தான் போகும்.

இன்னொன்றும் பேசியிருக்கிறார் பழனிசாமி. ஒரு விவசாயி ஆள்வது ஸ்டாலினுக்குப் பிடிக்கவில்லை என்ற ஒரு கருத்தைப் பேசியிருக்கிறார். ஆம் எனக்கு விவசாயி என்றால் பிடிக்கும். ஆனால், போலி விவசாயியை எனக்குப் பிடிக்காது. பச்சைத் துண்டு போட்டுக்கொண்டு பச்சை துரோகியாக இருக்கும் விவசாயியைப் பிடிக்காது.

உண்மையான விவசாயியாக இருந்தால், மூன்று வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது அதை எதிர்த்திருக்க வேண்டும். நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அந்தப் போராட்டத்தில் பங்கேற்று மாண்டு போயிருக்கிறார்கள். இன்றைக்கும் டெல்லியில் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப் போராட்டம் நடத்தியவர்களைப் பார்த்து, இடைத்தரகர்கள் என்று கொச்சைப்படுத்தி பேசி இருக்கிறார்.

விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட 3 விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படும். வேளாண் துறைக்குத் தனி பட்ஜெட் உருவாக்கப்படும். மீண்டும் உழவர் சந்தை பல்வேறு வகைகளில் செயல்படுத்தப்பட்டு அமைக்கப்படும். நெல் குவிண்டாலுக்கு ரூபாய் 2500, கரும்பு டன்னுக்கு ரூபாய் 4,000 வழங்கப்படும்.

அனைத்து உணவுப் பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை, இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த வேளாண்துறையில் தனிப்பிரிவு, நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் ஆய்வு மையம். மின் இணைப்பு கோரும் விவசாயிகள் அனைவருக்கும் தடையின்றி இலவச மும்முனை மின் இணைப்பு வழங்கப்படும்”.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே