கட்சியை நிர்வகிக்கவே ஆள் வைத்திருக்கும் நீங்கள் தமிழகத்தை எப்படி நிர்வகிப்பீர்கள்?- ஸ்டாலினிடம் அன்புமணி கேள்வி

கட்சியை நிர்வாகம் செய்யவே ஆள் வைத்திருக்கும் நீங்கள் தமிழகத்தை எப்படி நிர்வாகம் செய்வீர்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலினிடம் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பஜார் வீதியில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவின் வேட்பாளர் எம்.பிரகாஷை ஆதரித்து பாமக இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நேற்று இரவு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அன்புமணி கூறும்போது, ”ஸ்டாலின் கொடுத்திருப்பது வெற்று அறிக்கை. பிரசாந்த் கிஷோர் சொல்கிறபடி, அவர் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு விவசாயியான பழனிசாமியின் 4 ஆண்டு கால ஆட்சி, எந்தப் பிரச்சினையும் இல்லாத, பெண்களுக்குப் பாதுகாப்பான ஆட்சி. இந்த ஆட்சி மீண்டும் தொடர்ந்தால், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

எடப்பாடி பழனிசாமி சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, விவசாயிகளின் துன்பங்களை நன்கு அறிந்து படிப்படியாக உயர்ந்தவர். ஆனால், இந்தப் பக்கம் நிற்கும் ஸ்டாலினுக்கும் விவசாயத்துக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.

அவருக்கு விவசாயம் மட்டுமல்ல, வரலாறும் தெரியாது. சரித்திரமும் சமூக நீதியும் தெரியாது. தமிழ்நாட்டு முதல்வர் ஆக வேண்டுமென்றால் நிர்வாகத் திறமை இருக்க வேண்டும். ஆளுமைப் பண்பு இருக்க வேண்டும். உங்கள் கட்சியை நிர்வாகம் செய்யவே உங்களுக்குத் திறமை இல்லை. அதற்கு ஒரு கூலி ஆள் வைத்திருக்கிறீர்கள். நீங்கள் தமிழகத்தை எப்படி நிர்வாகம் செய்வீர்கள்?” என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே