ஓ.பி.எஸ்., ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு படை வாபஸ்..

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு படை பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்றதை தொடர்ந்து, சிறப்பு பாதுகாப்பு படையின் மூலம் பாதுகாப்பு பெறுபவர்களின் பட்டியலை தயார் செய்தது.

மத்திய உள்துறை அமைச்சகமும், கேபினட் செயலகம் மற்றும் உளவுத்துறை ஆகியவை இணைந்து சுமார் 3 மாதங்கள் நடந்த இந்த ஆய்வில், நாடு முழுவதும் உள்ள இன்னாள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

அதன்படி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த மத்திய பாதுகாப்பு படை வாபஸ் பெறப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றது.

பிற அமைச்சர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு ஓ.பன்னீர் செல்வத்துக்கு தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வி.ஐ.பி.க்களுக்கான பாதுகாப்பு தொடர்பாக மத்திய – மாநில அரசுகளின் முடிவுகளின்படி, நாடு முழுவதும் பல்வேறு தலைவர்களுக்கான பாதுகாப்பு படிநிலைகளை குறைப்பது, அதிகரிப்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளிட்டவையை கருத்தில் கொண்டு பாதுகாப்பு படிநிலைகள், குறைப்பது அல்லது கூட்டுவது தொடர்பாக உள்துறை அமைச்சகம் இத்தகைய முடிவுகளை எடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, ஓ.பன்னீர் செல்வத்துக்கு பெரிய அளவில் அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லாததால் அவருக்கான இசட் பிரிவு பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய பாதுகாப்புப் படை எனப்படும் கமாண்டோ படை பாதுகாப்பை தலைவர்களுக்கு மத்திய அரசுதான் கொடுக்கும்.

அதேபோல் அதை விலக்கும் முடிவையும் மத்திய அரசுதான் எடுக்கும்.

ஆனால், முடிவை மத்திய அரசு எடுக்கும் என்றாலும் அதற்கு மாநில அரசின் ஒப்புதல் தேவை.

இப்படி இருக்கும் பட்சத்தில் தமிழக அரசு இருவருக்கும் அளித்துவந்த பாதுகாப்பை வாபஸ் பெற ஒப்புக்கொண்டதா என்று தெரியவில்லை.

திடீரென இருவருக்கும் கொடுக்கப்பட்டு வந்த கமாண்டோ பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே