மண்ணின் மகளான என்னை வாக்காளர்கள் ஆதரிக்க வேண்டும்: பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வேண்டுகோள்

பாஜக தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று காலை இடையர் வீதியில் உள்ள விநாயகர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர், பிரச்சாரத்தை தொடங்கினார்.

உப்பார வீதி, வாணியர் வீதி, தியாகி குமரன் வீதி, பசுவண்ணன் கோயில், சுக்ரவார்ப்பேட்டை, மநக வீதி, தாமஸ் வீதி, ரங்கே கவுடர் வீதி வழியாக திறந்த ஜீப்பில் சென்று பிரச்சாரம் செய்தார். சில இடங்களில் நடந்துசென்றும் வாக்கு சேகரித்தார். அதிமுக முன்னாள் துணை மேயர் லீலாவதி உண்ணி, முன்னாள் மண்டலத் தலைவர் ஆதி நாராயணன், பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் சபரிகிரீஷ், மாநகர் மாவட்டத் தலைவர் ஆர்.நந்தகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ராஜவீதி தேர்நிலைத் திடல் அருகே ஆட்டோ ஓட்டுநர்களிடம் ஆதரவு திரட்டினார். மத்திய அரசு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கொண்டு வந்த திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறிய வானதி சீனிவாசன், பின்னர் அவர்களுடன் இணைந்து மதிய உணவு சாப்பிட்டார். அப்போது,ஆட்டோ ஒட்டுநர்களுக்கு மத்தியஅரசின் காப்பீடு திட்டம் குறித்துவிளக்கியதுடன், தனது சொந்த செலவில் காப்பீடு செய்துதருவதா கவும் வானதி சீனிவாசன் தெரிவித் தார்.

மாலையில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்ததுடன், நகை தயாரிப்பாளர்களிடம் ஆதரவு திரட்டினார். பிரச்சாரத்தில், வானதிசீனிவாசன் பேசும்போது, ‘‘தமிழகத்தில் மீண்டும் அதிமுகஆட்சி அமையப் போகிறது. இத்தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.

கோவை மக்களை தெரியாத, எவ்வித போராட்டத்திலும் கோவைமக்களுக்காக களமிறங்காத, கோவையின் பாரம்பரியத்தை, பண்பாட்டை, கலாச்சாரத்தை அறியாத மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசனும் போட்டியிடுகிறார்.

அவர் வாக்கிங், ஜாக்கிங்செல்கிறார். கம்பு சுற்றுகிறார். ஸ்டார் ஹோட்டலில் தங்கிக் கொண்டு ஆட்டோவில் செல்கிறார். இச்செயல்பாடுகளை நம்ப, கோவை மக்கள் ஏமாளிகள் அல்ல. கடந்த தேர்தலில் தோற்றாலும், இத்தொகுதி மக்களுக்காக தொடர்ந்து போராடி வருகிறேன். உங்களுக்காக உழைக்கும், மண்ணின் மகளான எனக்கு வாக்களிக்க வேண்டும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே