சசிகலா குடும்பத்தால்தான் வேதா இல்லத்திற்கு தன்னால் செல்ல முடியவில்லை என்று ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில், நிலம், கட்டிடம், மரங்களுக்கு இழப்பீடாக ரூ.68 கோடி நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும், வீட்டில் உள்ள அசையும் சொத்துக்களை கையகப்படுத்தவும் எதிர்ப்பு தெரிவித்து ஜெ.தீபா தரப்பிலிருந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
ஜெ.தீபா தரப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, ஜெயலலிதா உயிருடன் இருந்த போது எங்கிருந்தீர்கள் ? எனக் கேள்வி எழுப்பினார். அத்துடன் தீபா தொடர்ந்த இந்த வழக்கை இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்து உத்தரவிட்டார்.
இது குறித்து விளக்கமளிக்க ஜெ.தீபா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது “இது சொத்துக்களுக்கான போராட்டம் அல்ல, ஜெயலலிதா சொத்துக்களை அடைய வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை, நான் நடத்துவது உரிமைக்கான போராட்டம், உங்களுக்கு என்ன வேண்டும் என எனது அத்தை ஜெயலலிதா பல முறை கேட்டுள்ளார் ஆனால் நாங்கள் அதை நிராகரித்து வந்துள்ளோம்.
ஜெயலலிதா விரும்பாததால் என்னால் போயஸ் இல்லத்திற்கு செல்ல முடியவில்லை என்பது இல்லை; சசிகலாவால்தான் போயஸ் இல்லத்திற்கு என்னால் செல்ல முடியவில்லை” என்றார்.
மேலும் தொடர்ந்த ஜெ.தீபா “சசிகலா குடும்பத்தினரால் பல முறை அவமானப்படுத்தப்பட்டுள்ளேன்.
வேதா நிலையம் எங்களின் உடமை அல்ல; எங்களின் உரிமை. அடுத்த கட்டமாக என்ன செய்வது என்றே தெரியவில்லை.
நீதிமன்றத்தின் கேள்வி மிகுந்த வருத்தத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது. பன்னீர் செல்வம் நடத்திய தர்மயுத்தம் தான் எல்லோருக்கும் தலைவலி ஏற்பட்டது.
இந்த எல்லா பிரச்னைக்கும் காரணம் ஓ.பன்னீர்செல்வம் தான்” என்றார் அவர்.