டெல்லியில் இன்று நடந்த காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பாலியல் வன்கொடுமை குறித்த விமர்சனத்திற்காக மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்றார்.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பொது செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று பேசினர்.
கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கடந்த 6 மாதங்களில் இந்திய பொருளாதாரத்தை மத்திய அரசு சீரழித்து விட்டதாக குற்றம்சாட்டினார்.
இதனை சரிசெய்ய என்ன செய்வதென்றே தெரியாமல் மத்திய அமைச்சர்கள் தவிப்பதாகவும் அவர் சாடினார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசுகையில், மத்திய அரசு மனம் போன போக்கில் மசோதாக்களை கொண்டு வந்து நிறைவேற்றுவதாக கூறினார்.
ரேப் இன் இந்தியா என்ற கருத்துக்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக கூறி வந்த நிலையில், இன்றைய கூட்டத்தில் ராகுல் காந்தி அதனை மையப்படுத்தி பேசினார்.
பாலியல் வன்கொடுமை குறித்த விமர்சனத்திற்காக மன்னிப்பு கேட்கப்போவதில்லை. உண்மையை பேசியதற்காக மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள். மன்னிப்பு கேட்க நான் ராகுல் சவார்க்கர் அல்ல; ராகுல் காந்தி என்று அவர் பேசினார்.