கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் தேர்தலால் கிடைக்கும் வருவாயால் டிரம்ஸ் இசை குழுவினர் மகிழ்ச்சி

கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் தேர்தலால் நல்ல வருவாய் கிடைப்பதாக டிரம்ஸ் இசைக் குழுவினர் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

சென்னையில் கோயில் திருவிழாக்கள், கட்சி விழாக்கள், இல்ல விழாக்கள், இறுதி ஊர்வலம் என எதுவாக இருந்தாலும் முதலில் வந்து நிர்பவர்கள் டிரம்ஸ் இசைக் குழுவினர். இவர்கள் வந்த பிறகு தான் விழாவே களைகட்டுகிறது. கரோனா பரவல் தடுப்பு ஊரடங்கால் டிரம்ஸ் இசைக் குழுவினரின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. தளர்வுகள் வழங்கப்பட்டாலும், 2020-க்கு முன்பு இருந்த வாய்ப்புகள் இப்போது இல்லை. இந்நிலையில் வாராது வந்த மாமணியாக தேர்தல் வந்தது. அதன் மூலம் நல்ல வருவாய் கிடைப்பதாக டிரம்ஸ் கலைஞர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

சென்னையில் கட்சி வேட்பாளருக்கு முன்பாக டிரம்ஸ் இசைக் குழுவினர் தான் செல்கின்றனர். அந்த ஓசையை கேட்டுதான், வேட்பாளர் வருகையை அறிந்து மக்களும் வீட்டைவிட்டு வெளியே வருகின்றனர்.

இது தொடர்பாக வேட்பாளர் ஒருவருக்கு டிரம்ஸ் வாசித்து வரும் டமால், டுமீல் ஃபிரண்ட்ஸ் டோலி பாஜா இசைக் குழுவைச் சேர்ந்த சையத் ஜாவித் கூறியதாவது:

எங்கள் குழுவுக்கு 2020-ம் ஆண்டுக்கு முன்பு மாதம் சுமார் 7 முதல் 10 நிகழ்ச்சிகளுக்கு வாசிக்க அழைப்பார்கள். அதன் மூலம் ஒரு நபருக்கு, நிகழ்ச்சி ஒன்றுக்கு சுமார் ரூ.800 வருவாய் கிடைக்கும். கரோனா பரவலுக்கு பிறகு மாதத்துக்கு ஒன்றிரண்டு நிகழ்ச்சிகள் மட்டுமே கிடைத்து வந்தது. தற்போது தேர்தல் காலம் என்பதால் 15 நாட்களுக்கு எங்கள் குழுவுக்கு வேலை கொடுத்துள்ளனர். இதன் மூலம் நாளொன்றுக்கு காலை, மாலை என இரு வேளையும் சேர்த்து ஒரு நபருக்கு ரூ.1500 வரை கிடைக்கிறது. தேர்தலால் எங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றார்.

மற்றொரு கட்சி வேட்பாளருக்கு டிசம்ஸ் வாசித்த மகிழ்ச்சி டோலி பாஜா மற்றும் தப்பாட்டம் இசைக்குழுவை சேர்ந்த விஜய் கூறும்போது, “தற்போது, தேர்தலால் எங்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது” என்றார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே