குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு அ.தி.மு.க ஆதரவு தெரிவித்துள்ளதற்கு சித்தார்த் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப்கானிஸ்தானில் இருந்து 2014-ம் ஆண்டிற்கு முன்பாக இந்தியாவில் சட்டத்திற்கு புறம்பாக அல்லது விசா காலம் முடிந்தும் வசித்து வரும் முஸ்லிம்கள் அல்லாத இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், ஜைனர்கள், பவுத்தர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.
அந்த மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் குடியுரிமைச் சட்ட மசோதாவுக்கு அ.தி.மு.க ஆதரவு தெரிவித்துள்ளது.
காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், அ.தி.மு.க ஆதரவு அளித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பான நடிகர் சித்தார்த் ட்விட்டர் பதிவில், “என்னுடைய மாநிலத்துக்கும், என்னுடை மக்களுக்கும் எடப்பாடி பழனிசாமி பிரதிநிதியாக இருப்பதற்கு நான் மிகவும் அவமானப்படுகிறேன்; குடியுரிமைச் சட்ட மசோதாவுக்கு ஆதரவு அளித்ததன் மூலம் அவரின் உண்மையான நிறம், அவருடைய நேர்மையின் அளவு, எந்த விலை கொடுத்தாவது ஆட்சியைத் தக்கவைக்கவேண்டும் எண்ணம் தெரியவந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்த அவர், உங்களுடைய தற்காலிக அதிகாரத்தை ரசித்துக் கொள்ளுங்கள்.
ஜெயலலிதா ஒருபோதும் குடியுரிமைச் சட்டத்தை ஆதரிக்கமாட்டார்.
அவர் இல்லாதபோதும் அவருடைய பண்பாட்டை எப்படி அ.தி.மு.க அழிக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.