ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கார்த்திகை தேரோட்டம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் பிரசித்தி பெற்றது கார்த்திகை தீபத் திருவிழா.
10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவானது, கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவினை முன்னிட்டு முருகன் தெய்வானையுடன் தங்க சப்பரத்திலும், தங்க மயில் வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம், தங்க குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று முருகனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.
இதில் நவரத்தினங்கள் பொருத்திய செங்கோல் வழங்கி, சேவல்கொடி சாற்றி முருகனுக்கு கோலாகலமாக பட்டாபிஷேகம் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அருளாசி பெற்றனர்.
தொடர்ந்து இன்று காலையில் உற்சவர் முருகன் தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று 16 கால் மண்டபம் அருகே உள்ள சிறிய சட்ட தேரில் எழுந்தருளினர்.
அங்கு ஏராளமான பக்தர்கள் வடம் பிடிக்க தேரானது ரதவீதிகளில் வலம் வந்ததது.